Home » » மாயமான மலேசிய விமானி செல்போனில் அவசர அழைப்பு; உறுதிபடுத்த மலேசியா மறுப்பு

மாயமான மலேசிய விமானி செல்போனில் அவசர அழைப்பு; உறுதிபடுத்த மலேசியா மறுப்பு

Written By Unknown on Sunday, April 13, 2014 | 10:51 AM


மாயமான மலேசிய விமானம் ரேடார் இணைப்பில் இருந்து மாயமாவதற்கு முன், ஆபத்தை உணர்த்தும் விதமாக துணை விமானி யாருக்கோ செல் போனில் அவசர அழைப்பு விடுக்க முயன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அதனை உறுதிபடுத்த மலேசியா மறுத்துள்ளது.


தீவிர தேடுதல் வேட்டை

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் பீஜீங் சென்ற விமானம் கடந்த மாதம் 8–ந்தேதி அதிகாலையில் மாயமானது. இந்த விமானம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

அதன்படி ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமானங்கள் மற்றும், கப்பல்கள் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. மேலும் விமானத்தின் கறுப்பு பெட்டியை மீட்கும் நோக்கில், அதற்கான நவீன கருவிகளுடன் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாட்டு கப்பல்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

செல்போன் அழைப்பு

இந்த நிலையில் மாயமான விமானத்தின் விமானி மற்றும் துணை விமானியின் போன் அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், விமானம் நடுவானில் பறந்த போது துணை விமானி பரிக் அப்துல் ஹமிது, தனது செல்போன் மூலமாக அவசர அழைப்பு விடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மலேசியாவில் இருந்து வெளிவரும் ‘நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையில் கூறியிருப்பதாவது:–

கண்டறிய முடியவில்லை

மலேசியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள பினாங் தீவுக்கு மேலே விமானம் பறந்த போது, துணை விமானி, தனது செல்போன் மூலமாக யாருக்கோ அவசர அழைப்பு விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் விமானத்தின் வேகம் காரணமாக செல்போன் ‘டவர்’ மாறியதால், இந்த இணைப்பு பாதியிலேயே துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த அழைப்பை அடுத்த ‘டவரால்’ இணைக்க முடியவில்லை. இதனால், பரிக் அப்துல் ஹமிது யாருக்கு தொடர்பு கொண்டார் என்பதை கண்டறிய முடியவில்லை. கோலாலம்பூரில் இருந்து விமானம் புறப்படுவதற்கு முன் அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ ஆக இருந்தது. ஆனால் விமானம் பினாங் மற்றும் இகாரி பகுதிகளுக்கு இடையே பறந்த போது அவர் போனை ‘சுவிட்ச் ஆன்’ செய்துள்ளார்.

இந்த பகுதியில் பறந்த போது தான், விமானம் ரேடாரில் இருந்து மறைந்தது என்பதால், அவர் யாரையோ தொடர்பு கொள்ள முயன்றது தெளிவாகிறது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மலேசியா மறுப்பு

மலேசியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள பினாங் தீவுக்கு மேலே விமானம் பறந்த போது, துணை விமானி, தனது செல்போன் மூலமாக யாருக்கோ அவசர அழைப்பு விடுத்தது தொடர்பான தகவல்களை உறுதி படுத்த மலேசியா மறுத்துவிட்டது. அதிகாரிகளால் ஆய்வு செய்வதற்கு முன்னதாக எதனையும் உறுதியா கூற முடியாது என்று மலேசியா தெரிவித்துள்ளது.

“நாங்கள் உண்மை ஆய்வு செய்யாமல், இந்த செய்தித் தகவல் விககாரம் தொடர்பாக நாங்கள் எந்த ஒரு தகவல்களையும் தெரிவிக்க முடியாது” என்று அந்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஷாமுதின் ஹூசேன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடக அமைப்புக்கள் உள்பட அனைத்து தரப்பிலிருந்தும் அதிகாரிகள் இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் மற்றும் தடங்களை பெற்றுள்ளனர். ஆனால் அவற்றை விசாரிக்கும் அவர்கள் ஆதாரமற்றது என்று கூறிவிடுகின்றனர் என்று கூறியுள்ளார்.

மேலும், மாயமான மலேசிய விமானத்திலிருந்து விமானி அழைப்பு விடுத்தாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதில் அளித்த ஹூசைன் “என்னை பொறுத்தவரையில், இல்லை” என்று கூறினார். இவ்விவகாரத்தில் போலீசார் மற்றும் உலக புலானாய்வு அமைப்புக்கள் விசாரித்து வருவதில் ஊகங்களை எழுப்ப விரும்பவில்லை என்று ஹூசைன் கூறியுள்ளார். நான் விசாரணையில் இடையூறு ஏற்படுத்த விரும்பவில்லை. தற்போது விசாரணை மலேசியா போலீசால் மட்டும் நடைபெறவில்லை. எப்.பி.ஐ., எம்.ஐ.6., சீனா புலனாய்வு பிரிவு மற்றும் பிற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்று ஹூசைன் கூறியுள்ளார்.
Share this article :

Post a Comment