Home » » நூஹ் நபியின் வரலாறு (HISTORY OF NOAH)

நூஹ் நபியின் வரலாறு (HISTORY OF NOAH)

Written By Unknown on Monday, March 24, 2014 | 8:15 PM


ஆதம் நபியின் போதனைகளைப் பின்பற்றி வந்த மக்கள் மத்தியில் ஐந்து பெரியார்கள் வாழ்ந்தார்கள். அவர்களின் இறைவழிபாடும் பய பக்தியும் தூய வாழ்வும் எல்லோரையும் கவர்ந்தன.
அவர்கள் மிகமிக நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் திகழ்ந்தார்கள். அதனால் அவர்களின் மதிப்பும் செல்வாக்கும் நாளுக்கு நாள் உயர்ந்தன. அந்தப் பெரியார்கள் மீது மக்கள் அனைவரும் அதிக அன்பு செலுத்தினார்கள்.

வத்து, சுவா, யஃகூஸ், யஊக், நஸ்ர் ஆகியவைதான் அப்பெரியார் களின் அழகுப் பெயர்கள்.

காலங்கள் கடந்தன. அந்த ஐந்து பெரியார்களுக்கு மரணம் வந்தது. அப்பொழுது அவர்கள் மீது அன்பு வைத்திருந்த மக்களுக்குப் பெரும் அதிர்ச்சி! கடுமையான துக்கமும் துயரமும் அவர்கள் அனைவரையும் ஆட்கொண்டது!

அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள்: கண்மூடி – மண் மூடிப்போன நம் பெரியார்களை நாமும் மறந்து விடுவதா? அது கூடாது. என்றென்றும் அவர்களின் நினைவு நம் நெஞ்சங்களில் நிலைத்திருக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று அந்த மக்கள் சிந்தித்தார்கள்.

அத்தகைய தவறானதொரு சிந்தனையின் விளைவாகவே அந்தப் பெரியார்களுக்குச் உருவச் சிலைகள் உருவாக்கப்பட்டன. ஆம், அப்பெரியார்களை நினைவு கூர வேண்டும் என்பதற்காக அவர்களின் உருவங்களுக்குச் சிலைகள் வடிக்கப்பட்டன!

மிகமிக அழகிய தோற்றத்திலும் அளவான வடிவத்திலும் உருவாக்கப்பட்ட அந்தச் சின்னச் சின்னச் சிலைகளைப் பார்த்துப் பார்த்து மக்கள் எல்லாம் மன ஆறுதல் அடைந்தனர். ஆனந்தம் கொண்டனர்.

இந்த நிலை பலகாலம் நீடித்தது. பெரியார்களுக்குச் சிலைகள் செய்த அனைத்து மக்களையும் மரணம் வந்து அழைத்துக் கொண்டது. அவர்களின் சந்ததிகள் வந்தார்கள். அதற்கும் பிறகு மூன்றாவது – நான்காவது தலை முறையினர் தலையெடுத்தார்கள்!

பிற்காலத்தில் தோன்றிய அந்த மக்கள், தங்கள் கண்ணெதிரே நின்று கொண்டிருந்த கற்சிலைகளைக் கண்டார்கள்;. இந்தச் சிலைகளை எதற்காக நம் முன்னோர்கள் உருவாக்கினார்கள்? இவற்றிற்கும் நமக்கும் என்ன தொடர்பு? நாம் என்ன செய்ய வேண்டும்?-எதுவும் அவர்களுக்குப் புரியவில்லை. எதையும் அறியாதவர்களாய் அவர்கள் இருந்தார்கள்.

மனிதனின் மிகப் பெரும் விரோதியாகிய இப்லீஸ், மக்களின் இந்த அறியாமையை நன்கு பயன்படுத்திக் கொண்டான். ஏக இறைவனாகிய அல்லாஹ்வை வணங்கிவழிபட விடாமல் மக்களைத் திசை திருப்பு வதற்கான திட்டம் தீட்டினான்.

இப்லீஸ் மக்களிடம் வந்தான்: இந்தச் சிலைகள்தான் கடவுள்கள். இவற்றையே வணங்க வேண்டும். நோய்நொடிகள் குணம் அடைந்து உடல் நலம் பெறவும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் சூழ்ந்திடவும் இந்தச் சிலைகளையே நாடி வர வேண்டும்., இவற்றிடமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற நச்சுக் கருத்துகளை நயமாக எடுத்துச் சொன்னான். அறியாமையில் மூழ்கிக் கிடந்த அந்தமக்களும் அவற்றை அப்படியே நம்பினார்கள்!

இவ்வாறாக அந்த மக்களிடம் இருந்து மெல்லமெல்ல இறை வழிபாடு விடைபெற்றது., சிலை வழியாடு பரவியது!

ஆம், அன்றைய மக்களின் வாழ்வில் சத்தியம் நீர்த்துப்போனது. அசத்தியமே எல்லா விதமான பொய் அலங்காரங்களுடனும் பவனி வந்தது!

தெளிந்த நீரோடை போல் அமைதியாகச் சென்று கொண்டிருந்த மனித வாழ்க்கையைத் தீராத சிக்கல்கள் சீக்கிரமாக வந்து சூழ்ந்து கொண்டன!

இப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டு வதற்காக நூஹ் நபியை அல்லாஹ் அனுப்பிவைத்தான்.

நூஹ் அவர்கள் மாமனித ராக -மகத்தான குணவொழுக்கம் கொண்டவராக இருந்தார்கள். ஒரு மன்னராகவோ சமுதாயத் தலைவராகவோ செல்வச் சீமானாகவோ அவர்கள் இருக்கவில்லை.

ஒரு மனிதனின் மகத்துவத்திற்கும் உயர் அந்தஸ்துக்கும் ஆட்சி அதிகாரமோ தலைமைப் பதவியோ செல்வமோ அளவுகோல் அல்ல. உளத் தூய்மையும் ஒழுக்கமும் சீரிய சிந்தனையும் சிறந்த அறிவாற் றலும் தான் அளவுகோல்.

நூஹ் அவர்களின் உயர் அந்தஸ்துக்கு இன்னொரு காரணம் என்னவெனில், அவர்கள் எல்லா நிலைகளிலும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வை நினைவு கூர்வபவர்களாய் இருந்தார்கள்.

உணவு – பானம் உட்கொண்டாலும் ஆடைகள் அணிந்தாலும் வீட்டிலிருந்து வெளியே சென்றாலும் வீட்டில் நுழைந்தாலும் தூங்கச் சென்றாலும் விழித்தெழுந்தாலும்-எல்லா நிலைகளிலும் ஏக இறைவனா கிய அல்லாஹ்வை திக்ர் செய்து – துதித்துக் கொண்டிருப்பார்கள்.

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதை அவர்கள் மறப்பதே இல்லை. அவன் முன்னர் அருளிய அருட்கொடைகளை மட்டுமல்ல., அவ்வப் பொழுது அவன் அருளிக்கொண்டிருக்கும் பேருபகாரங்களை எல்லாம் நினைத்துப் பார்த்து மீண்டும் மீண்டும் அவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருப்பார்கள் நூஹ் நபியவர்கள்.

திருக்குர்ஆன் நூஹ் நபியைப் புகழ்வதைக் கேளுங்கள்: “நீங்கள், நூஹ{டன் கப்பலில் நாம் ஏற்றியிருந்த மக்களின் வழித் தோன்றல்கள் ஆவீர். திண்ணமாக நூஹ் நன்றியுள்ள ஓர் அடியாராகத் திகழ்ந்தார்” குர்ஆன் (17 : 4)

ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்யுமாறு இறைவன் இட்ட கட்டளையை ஏற்ற நூஹ் நபியவர்கள் மக்களிடம் வந்து பிரச்சாரத் தைத் தொடங்கினார்கள். குர்ஆன் கூறுகிறது:

‘திண்ணமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம். அவர் கூறினார்: என் சமுதாய மக்களே, அல்லாஹ்வை வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்ளுக்கில்லை. மகத்தான (அந்த மறுமை) நாளின் வேதனை உங்கள் மீது வந்து விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்” (7 : 59)

மக்களே, நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். இவ்வுலகில் இருப்பது ஒரே இறைவன்தான். அவனே இந்த அகிலம் முழுவதை யும் படைத்தான். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை.

ஆனால் இப்லீஸ் வந்துதான் உங்களை ஏமாற்றியுள்ளான். அது நீண்ட காலமாக நடந்துள்ளது. இந்தச் சிலைகள்தான் கடவுள்கள் என்று சொல்லி உங்களை வழிகெடுத்துள்ளான். இவற்றையே வணங்க வேண்டும் என்று உங்களை ஷைத்தான் திசைமாறச் செய்திருக்கிறான். ஷைத்தானுடைய இந்த மோசடியைத் தடுத்து நிறுத்துவதற்கான நேரம் வந்து விட்டது!

- அத்துடன் ஏக இறைவனாகிய அல்லாஹ், மனிதனுக்கு அளித்த கண்ணியத்தையும் எடுத்துரைத்தார்கள் நூஹ் நபியவர்கள்:

மனிதனை எத்துணை அழகிய வடிவத்தில் இறைவன் படைத் திருக்கிறான் என்பதைப் பாருங்கள்! மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவையும் இதர வாழ்க்கைச் சாதனங்களையும் வழங் கியவனும் அந்த இறைவன்தான். மட்டுமல்ல சீராகச் சிந்திப்பதற்குப் பகுத்தறிவையும் வழங்கியுள்ளான் அல்லவா? அந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்தித்துப் பாருங்கள். ஏக இறைவனாகிய அல்லாஹ்வை விடுத்து இந்தப் பெரியார்களின் சிலைகளை வணங்குவது அநீதி யாகும். பகுத்தறிவையே களங்கப்படுத்தும் காரியமாகும்.

-நூஹ் நபியின் நாவிலிருந்து அருவிபோல் கொட்டிய இந்த அறிவுரைகளை அந்த மக்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் தான். ஆனாலும் எந்தப் பயனும் இல்லை.

மாறாக, நீண்ட நித்திரையில் இருந்த அந்த மக்களைத் திடீரெனப் பிடித்து உலுக்குவது போல் இருந்தது நூஹ் நபியின் வார்த்தைகள்! அதனால் அவர்கள் சிந்திப்பதற்குப் பதிலாகக் கடும் சினம் தான் கொண்டார்கள்!

நூஹ் நபியவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டதும் அன்றைய உலகில் இருந்த தீய சக்திகள் அனைத்தும் மிரண்டன., கலக்கம் அடைந் திருந்தன. அன்பும் மக்கள் நலன் குறித்த அக்கரையும் இழையோடி யிருந்த நூஹ் நபியின் வார்த்தைகளைக் கேட்டு அதிகார பீடம் அச் சத்தால் ஆட்டம் கண்டது! ஆம், நூஹை நபியென ஏற்றுக் கொண்டால் தங்களின் அதிகாரமும் சுக வாழ்வும் போய்விடுமோ என்று அவர்கள் அஞ்சினார்கள்!

நூஹ் நபி விடுத்த ஏகத்துவ அழைப்பு ஏழை எளியோர்கள், வறி யோர்கள் மற்றும் பலவீனமான மக்கள் ஆகியோரின் இதயத்தில் இடம் பிடித்தது. அவர்களின் கஷ்டங்களையும் துன்பங்களையும் நீக்கி மனத்திற்கு ஆறுதல் அளிக்கும் அருமருந்தாய் அமைந்தது.

ஆனால் செல்வச் சீமான்களும் மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்த சமுதாயப் பிரமுகர்களும் பலசாலிகளும் என்ன செய்தார்கள் தெரியுமா? நூஹ் நபி விடுத்த ஏகத்துவ அழைப்பைச் சந்தேகக் கண் கொண்டு பார்த்தனர்! அன்றைய சமூகத்தைத் தம் விருப்பப்படி ஆட்டிப்படைத்து நன்கு அனுபவித்து வந்த இந்தப் பிரிவினர் தங்களுடைய சமூக அந்தஸ்தும் செல்வாக்கும் நீடிக்க வேண்டுமெனில் நூஹ் நபியை எதிர்த்தே ஆக வேண்டும் என்ற முடிக்கு வந்தார்கள்!

முதலில் நூஹ் நம்மைப்போன்ற ஒரு மனிதர்தானே என்று கூறி மக்களைச் சந்தேகத்தில் உழல வைத்தனர். குர்ஆனில் வருகிறது:

“அவருடைய அறிவுரையை ஏற்க மறுத்த அவருடைய சமுதாயத் தலைவர்கள் கூறினார்கள்: எங்களுடைய பார்வையில் நீர் எங்களைப் போன்ற மனிதரே அன்றி வேறல்லர்” (11 : 27)

- ஆனால் நூஹ் நபியும்கூட தம்மை ஒரு மனிதர் என்று தான் கூறியிருந்தார்கள். அதற்கு மேல் எதுவும் அவர்கள் கூறவில்லை . . .

மனிதர்களில் ஒருவரைத்தான் நபியாக – ரசூலாக இவ்வுலகத்திற்கு அல்லாஹ் அனுப்பி வைக்கிறான். ஏனெனில் இவ்வுலகில் மனிதர்கள்தான் வசிக்கிறார்கள். மாறாக இங்கு மலக்குகள் வசித்தார்கள் எனில் மலக்கு(வானவர்) ஒருவரைத் தூதராக அல்லாஹ் அனுப்பியிருப்பான்!

அன்றைய நிராகரிப்பாளர்கள், நபிமார்களைப் பார்த்து – நீங்கள் மனிதர்கள்தானே., எங்களைப் போன்றவர்கள்தானே என்று கூறி சத்தி யத்தை ஏற்காதிருப்பதற்கு ஒருநொண்டிக் காரணத்தை முன்வைத் தார்கள்!

அந்த நிராகரிப்பாளர்களைப் போன்று சத்தியத்தை ஏற்காதிருப்ப தற்காகத்தான் இன்றைய அனாச்சாரவாதிகள் – நபிமார்கள் மனிதர்கள் அல்லர் என்று திரிபுவாதம் பேசுகிறார்கள்!

நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள்தான்., அதனால் உங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது (நபிமார்களைப் பார்த்து அன்றைய நிராகரிப்பாளர்கள் சொன்னது இது)

நபிமார்கள் நம்மைப் போல் மனிதர்கள் அல்லர். மனிதத் தன்மையை விட்டும் மேம்பட்டவர்கள். எனவே அவர்களிடம் நேரடியாகப் பிரார்த் தனை செய்வதும் அதற்காகச் செய்யும் இந்தச் சடங்குகளும் தவறு அல்ல. (இன்றைய அனாச்சார வாதிகள் நபிமார்கள் பற்றிச் சொல்லும் வார்த்தை இது)

இரு வார்த்தைகளுக்கும் பின்னால் ஒளிந்திருக்கும் தீய நோக்கம் புரிகிறதா? நபிமார்களின் அறிவுரைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் அது! அதற்காகவே இப்படிஇப்படியெல்லாம் திரிபு வாதம் பேசுகிறார்கள், இந்தத் தீயவர்கள்!

மக்கள் மத்தியில் உமது சொல்லுக்கு என்ன மதிப்பு இருக்கிறது? ஏதோ ஒரு சில பேர்தான் உம்மைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள்கூட ஏழைகள், பலவீனமான வர்கள், சாமானியர்கள்! விபரம் தெரிந்தவர்கள் யாரும் உம்மைப் பின்பற்றவில்லையே!

அதற்கு நூஹ் நபி அளித்த பதில் அளித்தார்கள்: இவர்களெல்லாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களின் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ்தான் நன்கு அறிந்தவன்!

பிறகு ஒரு கட்டத்தில் கீழிறங்கி வந்து நூஹ் நபியிடம் பேரம் பேசத்தொடங்கினார்கள், அந்த நிராகரிப்பாளர்கள்:

“நூஹே! நாங்கள் உம்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும்., உமது அறிவுரைகளைக் கேட்க வேண்டும் என விரும்புகிறீர், அப்படித்தானே! அதற்கு ஒரு நிபந்தனை. இதோ உம்மைச் சுற்றிலும் அமர்ந்திருக்கக் கூடிய இவர்களையெல்லாம் நீர் இங்கிருந்து விரட்டிட வேண்டும். இவர்கள் ஏழைகள். உதவாக்கரைகள்! எங்களோடு சரிசமமாக அமர்ந் திருக்கத் தகுதி இல்லாதவர்கள். இவர்களையும் எங்களோடு அமர வைத்துக் கொண்டு நீர் அறிவுரை வழங்கக்கூடாது!”

நூஹ் நபியவர்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த நிராகரிப்பாளர்களின் வார்த்தைகளில் ஆணவமும் தற்பெருமை யும் கொட்டிக்கிடந்தது . . . . .

இதோ பாருங்கள்! இந்த ஏழை மக்களை என்னுடைய அவையில் இருந்து விரட்டப்போவதில்லை. ஏனெனில் இவர்கள் எனது அறிவுரை ஏற்று ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இறைக்கட்டளைகளைப் பின் பற்றி வாழ்கிறார்கள். அந்த வகையில் இவர்கள் இறைவனின் விருந்தினர் ஆவார்கள்! என்னுடைய விருந்தினர் அல்லர்!

இவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் இறைநம்பிக்கையும் இறை மார்க்கமும் சுவனபதிக்குக்கொண்டு சேர்க்கக் கூடியதாகும். சுவனபதி என்பது எனது வீடு அல்ல., எனது விருப்பப்படி சிலரை சேர்த்துக் கொண்டு வேறு சிலரை அங்கிருந்து விரட்டுவதற்கு! சுவனம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது. அவன் நாடுகிறவர்களை அங்கு அனுமதிக்கிறான்.

- இவ்வாறு நூஹ் நபிக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் எகத்துவக் கொள்கைப் போராட்டம் நீடித்தது, விவாதங்கள் தொடர்ந்தன.

எதிரிகள் எடுத்துவைத்த ஆதாரங்கள் எல்லாம் வலுவிழந்து இனி சொல்வதற்கு எதுவும் அவர்களிடம் இல்லை என்றானது. அப்போது தான் எதிரிகள், நூஹ் நபியிடம் மரியாதைக் குறைவாகப் பேச ஆரம்பித்தார்கள்;. அவர்களை ஏசவும் பேசவும் தொடங்கினார்கள், ஒருவகை வரட்டுத் துணிவுடன்!

குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “நிராகரிப்பை மேற்கொண்டு அவருடைய சமூகப் பிரமுகர்கள் கூறினார்கள்: (நூஹே) உம்மை நாங்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கக் காண்கிறோம்” (7 : 60)

ஆனால் அதற்கும்கூட நூஹ் நபியவர்கள், நபிமார்களுக்கே உரிய உயர்ந்த பண்பாட்டுடன்தான் பதில் அளித்தார்கள்:

“என் சமுதாயத்து மக்களே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை. நான் அகிலத்தாருடைய அதிபதியின் தூதனாக இருக்கிறேன். என் இறைவனின் தூதுச் செய்திகளைத்தான் உங்களுக்கு நான் எடுத் துரைக்கிறேன். உங்கள் நலன் நாடுபவனாகவும் இருக்கிறேன். மேலும் நீங்கள் அறியாதவற்றை யெல்லாம் அல்லாஹ்விடம் இருந்து நான் அறிகிறேன்” (7 : 62)

நூஹ் நபியவர்கள் தம் சமுதாய மக்களை ஊக்கத்துடனும் உறுதி யுடனும் அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் அழைப்புப் பணியிலேயே கழிந்தன.

ஆண்டுகள் பல கடந்தன. நூஹ் நபியவர்கள் தொடர்ந்து இறை வழிபாட்டின் பக்கம் அழைத்துக் கொண்டே இருந்தார்கள். இரவு பகல் எந்நேரமும் அதே சிந்தனைதான். அதே பணிதான்! இரகசியமாக வும் பகிரங்கமாகவும் அறிவுரை கூறினார்கள். வேத வசனங்களை ஓதிக்காட்டி, உவமானங்கள் எடுத்துச் சொல்லி அல்லாஹ்வின் பேராற் றலை அனைவருக்கும் விளக்கினார்கள்.

அல்லாஹ்வை மட்டுமே வணங்கும்படி அறிவார்ந்த முறையில் – உள்ளம் உருகும்படி எடுத்துரைத்தார்கள். அல்லாஹ் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்., அவன் உங்களை மன்னிப்பான் என்று அன்போடு அழைத்தார்கள். எந்தப் பிரதி பலனும் எதிர்பாராது உழைத்தார்கள்!

அம்மக்களோ, நூஹ் நபியர்கள் இவ்வாறெல்லாம் சொன்ன பொழுது விரல்களால் காதுகளை அடைத்துக் கொண்டு ஓடினார்கள்! அந்த அளவுக்கு அவர்களின் இதயங்கள் குரடாகியிருந்தன!

அழைப்புப் பணியின் கணக்கில் ஆண்டுகள் மூன்று இலக்கத்தை எட்டிப்பிடிக்க, இறைநம்பிக்கை கொண்டோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்தது.

இவ்வுலகில் நூஹ் நபியவர்கள் 950 ஆண்டுகள் வாழ்ந்து அழைப்புப் பணி ஆற்றினார்கள். ஆனாலும் அதனை ஏற்று நேர்வழி பெற்றோர் குறைவாகவே இருந்தனர்

இவ்வளவு நீண்ட நெடிய காலம் உழைத்து அழைப்புப் பணி ஆற்றியும் மக்களின்; உள்ளம் இளக வில்லை என்பதைக்கண்ட நூஹ் நபி மனம் நொந்தார்கள்தான். ஆனாலும் ஊக்கம் குன்றிடவில்லை! கவலைப்பட்டு கவலைப்பட்டே அவர்களின் இதயம் கனத்தது. ஆனா லும் அவர்கள் இறைவன் மீதான நல்லாதரவை கைவிட்டு விட வில்லை!

ஒரு நாள் அல்லாஹ்விடம் இருந்து ஓர் அறிவிப்பு வந்தது. நூஹே! இப்பொழுது நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர இனி யாரும் நம்பிக்கை கொள்ளப் போவதில்லை.

அப்பொழுதுதான் நூஹ் நபியவர்கள் அந்த நிராகரிப்பாளர்களைத் தண்டிக்க வேண்டுமென அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள்.

அல்லாஹ்வும் தன் நபியின் இறைஞ்சுதலுக்குப் பதில் அளித்தான். ஆம், ஒரு பிரமாண்டமான கப்பல் செய்யுமாறு நூஹ் நபிக்குக் கட்டளை பிறப்பித்தான்!

கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் வகையில் பெரிய பெரிய மரங் களை வளர்க்குமாறு அல்லாஹ் கூறினான். நூஹ் நபியும் அவ்வாறே மரங்கள் நட்டார்கள். அவை வளர்வதற்குப் பல்லாண்டுகள் பிடித்தன.

எதிர்பார்த்தவாறு மரங்கள் வளர்ந்து வந்தபொழுது அவற்றைப் பாளங்களாக அறுத்துக் கப்பல் செய்தார்கள். அதற்கும் பல்லாண்டுகள் பிடித்தன. மிகப்பிரமாண்டமாக கப்பல் தயாரானது! அது மூன்று தளங்கள் கொண்டதாக இருந்தது. முதல் தளம் விலங்களுக்கு. இரண்டாவது தளம் மனிதர்களுக்கு. மூன்றாவது தளம் பறவை களுக்கு. இவ்வாறு அல்லாஹ்வின் வழிகாட்டலின்படி மிகப் பிரமாண்ட மானதொரு கப்பலை நூஹ் நபியவர்கள் கட்டிமுடித்தார்கள்.

கப்பலைத் தயார் செய்துகொண்டிருக்கும்பொழுது அந்த வழியாக நிராகரிப்பாளர்கள் செல்வார்கள். கப்பல் செய்வதில் மும்முரமாக நூஹ் நபி ஈடுபட்டிருப்பதைக் கண்டு பரிகாசம் செய்வார்கள்.

நீண்ட காலமாக மழை தண்ணீர் இல்லாமல் பூமி வரண்டு கிடந் தது. அருகில் நதியோ கடலோ எதுவுமில்லை. நிராகரிப்பாளர்கள் பரிகாசத்துடன் கேட்டார்கள்: “என்ன நூஹே! கப்பலைத் தரையிலா செலுத்தப் போகிறீர்? கடல்எங்கே இருக்கிறது., கப்பல் ஓட்டுவதற்கு?”

-இவ்வாறு ஏளனமாகக் கேட்டுச் சிரித்துக் கொண்டு ஒருவருக்கு மேல் ஒருவர் விழுவார்கள். “நூஹின் பைத்தியக் காரத்தனம் இப்பொழுது முற்றிப் போவிட்டதோ” என்று பரிகாசமாகப் பேசினார்கள்!

இவ்வுலகின் புறத்தோற்றத்தைக் கண்டு மனிதன் எந்த அளவுக்கு ஏமாந்துபோகிறான். கண்ணெதிரில் காட்சி தருபவைதான் ஏற்றுக்கொள்வோம். அதற்கு மேல் எதுவும் இல்லை என்றுதான் மனிதன் கருதுகிறான்! அதனால் இன்னும் சில நாட்களுக்குப் பின்பு இதே இடத்தில் உண்மையிலேயே நூஹ் நபி கப்பல் விடப்போகிறார்கள் என்பது பற்றி அந்த மக்களில் யாரும் சிந்திக்கவில்லை!

பெரும் சோதனை ஒன்று அவர்களுக்குக் காத்திருக்கிறது., அது பற்றி நூஹ் நபி எச்சரிக்கையும் செய்துவிட்டார்கள். அதிலிருந்து தப்பிப்பதற்காக ஆயத்தங்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள்! இத்தனைக்குப் பிறகும் அந்த மக்கள் அலட்சியத்தில்தான் மூழ்கி இருந்தார்கள்! அவர்களின் மதியீனம் குறித்தும் அசட்டுத் தைரியம் குறித்தும் உண்மையில் நூஹ் நபியவர்களுக்குச் சிரிப்புதான் வந்தது!

எவ்வளவு பெரிய பைத்தியக்காரர்கள் இம்மக்கள்! இந்நிலையில் நம்மைப் பைத்தியக்காரன் என்கிறார்களே என்று மன வேதனை அடைந்தார்கள் நூஹ் நபியவர்கள்!

கப்பல் செய்து முடிந்தது. நூஹ் நபியின் வீட்டிலிருந்த உலை அடுப்பில் இருந்து நீர் பொங்கிப் பீரிட்டது. அதுவே வெள்ளப் பிரள யத்தின் அடையாளம்.

நூஹ் நபியவர்கள் எல்லா உயிரினங்களில் இருந்தும் ஒரு ஜோடியை – அதாவது ஒவ்வொரு விலங்குகளில் இருந்தும் தலா ஒரு ஜோடியைப் கப்பலில் ஏற்றினார்கள். இதேபோன்றே ஒவ்வொரு பறவை களின் ஜோடியையும் ஏற்றினார்கள். கப்பல் செய்யும்பொழுதே பெரிய பெரிய கூண்டுகளையும் தயாரித் திருந்தார்கள்.

இவ்வாறு எல்லா உயிரினங்களையும் ஏற்றிய பிறகு நூஹ் நபியும் அவர்களின் குடும்பத்தினரும் கப்பலில் ஏறினார்கள். அவர்களுடைய குடும்பத்தினர் என்றால் எல்லோரும் அல்ல., இறைநம்பிக்கை கொண்ட வர்கள் யார் யாரோ அவர்களுக்கு மட்டும் தான் அனுமதி. நூஹ் நபியின் மனைவியும் மகனும் – நூஹ் நபி மீது நம்பிக்கை கொள்ளா ததால் கப்பலில் ஏற்றப்படவில்லை. இறைநம்பிக்கையாளர்கள் மட்டும் கப்பலில் ஏற்றப்பட்டனர். அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறை வாகவே இருந்தது.

நூஹ் நபியைப் பற்றி அவர்களின் எதிரிகளிடத் தில் அவதூறாகப் பேசுவாள். இந்தக் கிழடன் இப்படித்தான் ஓயாமல் உழறிக்கொண்டிருக்கிறார்! -இறைவனே பெரியவன், ஒரே இறை வனை மட்டுமே வணங்க வேண்டும் என்று என்ன வெல்லாமோ கூறிக்; கொண்டிருக்கிறார்! நீங்கள் இதனைக் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள் என்று கோள் சொல்லுவாள்! நபியின் மனைவியே தம் கணவரின் பிரச்சாரத்திற்கு எதிராகப் பேசினால் பிறகு யார்தான் நம்பிக்கைகொண்டு நேர்வழி திரும்புவார்கள்!

இவ்வாறு நூஹ் நபியின் மனைவிக்கும் கப்பலில் இடம் அளிக்கப் படாமல் இறைவனின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாக்கப் பட்டாள்!

இறைநம்பிக்கையாளர்களை நோக்கி நூஹ் நபி கூறினார்கள்: ” இந்தக் கப்பலில் ஏறிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டே இது செல்வதும் நிலைகொள்வதும் உள்ளது. திண்ணமாக என் அதிபதி பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை பொழிபவாகவும் இருக்கி றான்” (11 : 41)

பூமியில் எங்கு எங்கு குழிகள் – பள்ளங்கள் இருந்தனவோ அவை எல்லாவற்றில் இருந்தும் தண்ணீர் பொங்கியது., பீறிட்டுக் கிளம்பியது! அதுவே பிரளயத்தின் ஆரம்ப அடையாளம்!

பிறகு வானத்தில் இருந்தும் அடைமழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. அப்படிப்பட்டதொரு மழையை அதற்கு முன்னரும் பூமி பார்த்ததில்லை, அதற்குப் பின்னரும் பார்த்ததில்லை!

இவ்வாறு பெருவாரியான மழை வானத்திலிருந்தும் கொட்ட, பூமியும் தண்ணீரை வெளியே தள்ள நீர் மட்டம் ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்துக்கொண்டிருந்தது. மக்கள் பதறித்துடித்து செய்வ தறியாது அங்கும் இங்கும் ஓடினார்கள்!

சற்றுத் தொலைவில் நூஹ் நபியின் மகன் நின்று கொண்டி ருந்தான். அவன் இறைநம்பிக்கை கொள்ளாமல் நிராகரிப்பாளர்களின் கூட்டத்தில் சேர்ந்திருந்தான். அவனைக் கண்டதும் நூஹ் நபியர்கள் அவனை அன்போடு அழைத்தார்கள். அதனை குர்அன் இவ்வாறு கூறுகிறது:

“ஓ மகனே! எங்களுடன் கப்பலில் ஏறிக்கொள். நராகரிப்பாளர்களில் ஒருவனாக நீ ஆகிவிடாதே!” (11 :42)

இறைநம்பிக்கை கொள்றுமாறுதான் தம் மகனை நூஹ் நபியவர்கள் அழைத்தார்கள். நீ இப்பொழுதும் பிடிவாதமாக இருக்காதே! இறைவனின் தண்டனை நெருங்கி வந்து விட்டது, பார்! எனவே எனது அழைப்பை ஏற்றுக்கொள்! இறைநம்பிக்கைகொள். கப்பலில் ஏறிக்கொள், கரை சேர்ந்து விடலாம் என்றுதான் தம் மகனி டம் சொன்னார்கள் நூஹ் நபியர்கள்!

அவன் சொன்ன பதிலை குர்ஆனே குறிப்பிடுகிறது, “நான் இப்பொழுதே மலை மீது ஏறிக் கொள்கிறேன். அது என்னை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி விடும்” (11 : 43)

அதற்கு நூஹ் நபி சொன்னார்கள்: “இன்று அல்லாஹ்வின் தீர்ப்பில் இருந்து காப்பாற்ற்கூடியது எதுவுமில்லை., ஆனால் அல்லாஹ் யாருக்கு கருணை புரிந்தானோ அவர்கள் மட்டும் காப்பாற்றப் படுவார்கள்!” (11 : 43) – அதற்குள் பெரும் அலை வந்து குறுக்கிட்டு அவ்விருவரையும் பிரித்து விட்டது. மகன் தண்ணீரில் மூழ்கி அழிந்தான்.

வெள்ளப் பிரளயத்தின் கோபம் அதிகமானது. மக்களின் தலைக்கு மேல் உயர்ந்த வெள்ளம் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே சென்றது. பிறகு மலை உச்சிக்கும் மேலே எழுந்து பேரலைகள் ஆர்ப்பரித்தன! பூமியின் மேற்பரப்பையே மூடியது! எங்கு நோக்கினாலும் வெள்ளம் பெறுக்கெடுத்துக் கடல் அலைகள் போல் காட்சியளித்தது!

அந்தப் பேய் வெள்ளத்தில் சிக்கிய எல்லா உயிரினங்களும் பரிதாபமாக அழிந்தன. மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் என்று எந்த ஓர்உயிரின மும் உயிருடன் இல்லை! கப்பலில் நூஹ் நபியுடன் ஏற்றப்பட்டிருந்த இறைநம்பிக்கையாளர்களும் ஏனைய உயிரினங்களும் மட்டும்தான் காப் பாற்றப்பட்டார்கள்!

அப்படிப்பட்டதொரு வெள்ளப் பிரளயத்தை இன்று சிந்தித்துப் பார்க் கவே முடியாது! நமது கற்பனைக்குள் வராது. அவ்வளவு கடுமை யான, கொடுமையானதொரு நிகழ்ச்சியாகும் அது! படைத்த இறைவ னின் பேராற்றலை நிரூபிக்கக்கூடிய பிரமாண்டமான சான்றுகளுள் ஒன்றாகும். எவ்வளவு காலம் நீடித்தது என்பதை யாரும் சொல்ல முடியாது.

நூஹ் நபியின் கப்பல் மலைகளைப் போல் எழுந்து ஆற்பறித்துக் கொண்டிருந்த பேரலைகளுக்கு மத்தியில் தத்தளித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது.

ஒருவாறாக இறைவனின் கட்டளை வந்தது, வானத்திற்குக் கூறினான்: அழுகையைக் கொஞ்சம் நிறுத்திக்கொள் என்று! இதே போல் பூமிக்கும் கட்டளையிட்டான்: எல்லாத் தண்ணீர்ரையும் விழுங்கிவிடு என்று!

ஜூதி மலை மீது நீ நிலைகொள் என்று கப்பலுக்கும் கட்டளை பிறப்பித்தான் இறைவன்! ஆம்! வெள்ளம் படிப்படியாக வற்றவே கப்பல் ஜூதி மலை மீது மோதிக்கொண்டு நின்றது.

இப்பொழுதும் அந்த மலை குர்திஸ்தான் நாட்டில் இப்னு உமர் எனும் பெயரு டைய தீவுப் பகுதியில் அந்த மலை உள்ளது. இன்றும்கூட ஜூத் எனும் பெயரில்தான் மக்கள் அதனை அழைக்கிறார்கள்.

கப்பல் நின்றதும் நூஹ் நபியவர்கள் ஒரு புறாவை வெளியே பறக்க விட்டு பரிசோதித்துப் பார்த் தார்கள். அது ஒலிவச்செடியின் குச்சியை அலகில் எடுத்துக் கொண்டு திரும்பி வந்தது. அதனைக் கண்ட போதுதான் எல்லோருக்கும் நிம்மதி;! தண்ணீர் முழுவதுமாக வற்றி விட்டது என்பது உறுதி யானது!

அமளி துமளிகள் எல்லாம் முடிந்து அமைதி நிலவியது! தம் மகனும் கப்பலில் ஏறி இருந்தால் தப்பித்திருப்பானே. இந்தப் பேய் வெள்ளத்தில் மூழ்கி மாண்டுவிட்டானே என்று மகனின் மீது தந்தைக் குப் பரிதாபம் ஏற்பட்டது. ஆம், நூஹ் நபியவர்கள் மிகவும் கவலை யுடன் இருந்தார்கள். மகனின் பாசம் அவர்களை விட்டும் நீங்க வில்லை.

நூஹ் நபியவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள்: என் இறை வனே! என்னுடைய மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன்தானே! (என் குடும்பத்தினரைக் காப்பாற்றுவதாக) நீ அளித்த வாக்குறுதி உண்மை யானதாகும். தீர்ப்பு வழங்குவோரில் எல்லாம் நீ உயர்ந்தவனும் சிறந்த வனுமாhவாய் (11 : 45)

அதாவது, நூஹ் நபியவர்கள் தம்முடைய மகன் தமது குடும்பத் தைச் சேர்ந்தவன் என்று அல்லாஹ்வுக்கு எடுத்துச் சொல்ல நாடினார்கள். அவர்களுடைய குடும்பத்தார்களைக் காப்பாற்றுவதாக அவர் களுக்கு அல்லாஹ் வாக்களித்திருந்தான். ஆனால் அவர்களுடைய மகன் வெள்ளத்தில் மூழ்கி இறந்து விட்டானே என்று மனம் வருந்தி பிரார்த்தனை செய்தார்கள்.

அதற்கு அல்லாஹ் பதில் அளித்தான்: ஓ நூஹே! நிச்சயமாக அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். அது ஒரு வீணான செயல் ஆவான்; எதனுடைய உண்மை நிலையை நீர் அறிய மாட்டீரோ அதனைப் பற்றி என்னிடம் கேட்காதீர். அறிவிலிகளில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம் என்று உமக்கு நான் அறிவுறுத்துகிறேன்;. அல் குர்ஆன் (11 : 46)

அதாவது, நபியின் மகன், நபியின் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன் என்பதை உணர்த்தினான் அல்லாஹ். ஏனெனில் அவன் இறைநம்பிக்கை கொள்ளவில்லை. இறை மார்க்கத்தைப் பொறுத்த வரையில் மக்களை இணைக்கும் பாலம் எது தெரியுமா? இறை நம்பிக்கைதான். இரத்த பந்தம் அல்ல. யார் அல்லாஹ்வையும் நபியை யும் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்தான் நபியின் குடும்பத்தைச் சேர்ந்தவன்!

சரியாகச் சொல்வதானால் இறைநம்பிக்கையாளர்தான் உண்மையான மகன்! அவருடைய மனைவியின் மூலமாக அவருக்குப் பிறந்தவர் – நிராகரிப்பாளனாக இருந்தால் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவனாக முடியாது. இந்த அடிப்படையை நூஹ் நபி புரியாத காரணத்தால்தான் அவர்களை அல்லாஹ் கண்டித்தான்!

நூஹ் நபியவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் மீண்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்கி கருணை புரிந்தான். கப்பலில் இருந்து இறங்குமாறு கட்டளையிட்டான்.

நூஹ் நபி கப்பலை விட்டும் கீழே இறங்கினார்கள். பறவைகளை யும் விலங்குகளையும் அவிழ்த்துவிட்ட பிறகு பூமியில் நெற்றியை வைத்து ஸ{ஜூதில் விழுந்து அல்லாஹ்வை வணங்கிளார்கள்.

வெள்ளம் முழுவதும் வற்றிய பின்னரும் பூமி எங்கும் ஒரே சேரும் சகதியுமாகவே இருந்தது. நூஹ் நபியவர்கள் தொழுது முடித்த பிறகு பிரமாண்டமான வழிபாட்டுத் தலம் ஒன்றை கட்டி முடிக்கத் தீர்மானித்து அதற்காகப் பூமியில் அடித்தளம் அமைக்கும் பணியில் இருந்தார்கள்.

மக்கள் எல்லோரும் நெருப்பு மூட்டி அதன் சுற்றிலும் அமர்ந்து குளிர் காய்ந்தார்கள். முன்னர் கப்பலில் நெருப்பு மூட்டுவது தடுக்கப் பட்டிருந்தது., ஏனெனில் கப்பல் தீப்பற்றி விடக் கூடாது என்பதற்காக. அதனால் கப்பலில் இருந்த நாட்களில் யாருமே சூடான உணவை உட்கொள்ளவில்லை. இப்பொழுது இயல்பு வாழ்வு திரும்பிதும் அடுப்புகளைப் பற்றவைத்து இறைச்சிகளைப் பொறித்து எல்லோரும் உண்டு மகிழ்ந்தார்கள்.

வெள்ளத்தின் பீதி மாறியதால் மக்களின் முகங்களில் மகிழ்ச்சி அலை மோதியது. இயற்கையான உரையாடல்கள் தொடங்கின. சந்தோசமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

கப்பலில் இருந்தபொழுது யாரும் யாருடனும் பேசாலம் மௌன மாகவே இருந்தார்கள். என்ன நடக்குமோ என்ற பீதி அனைவரையும் பிடித்தாட்டியது. எங்கும் வியாபித்திருந்த வெள்ளப்பிரளயத்தால் திகில் அடைந்திருந்தார்கள். அல்லாஹ்வின் மகத்துவமும் மாண்பும் அவர் களின் உள்ளங்களில் நிறைந்திருந்தன. அதுவே அவர்களை உள்ளத்த ளவில் சிறை வைத்திருந்தன!

ஆண்டுகள் பல கடந்தன. நூஹ் நபியவர்கள் தமக்கு மரண நேரம் நெருங்கிவருவதை உணர்ந்தார்கள். தம் மக்கள் அனைவரை யும் அருகில் அமர்த்தி ஓர் உண்மையை எடுத்துரைத்து விட்டு இவ்வுலகைவிட்டும் விடை பெற்றார்கள் :

ஏக இறைவனாகிய அல்லாஹ்வை நீங்கள் என்றைக்கும் மறந்து விடக்கூடாது. நீங்கள் அனைவரும் அவன் ஒருவனை மட்டுமே வணங்கி வர வேண்டும்;!

இறைநம்பிக்கை கொண்ட அனைவரையும் நம்முடைய சகோதரர்களாகவே நாம் கருத வேண்டும். யாரையும் இழிவாகக் கருதக் கூடாது.

நாம் இறைவனுக்கு அஞ்சி வாழாமல் தீமைகள் புரிந்தால், பாவங்களில் மூழ்கிக் கிடந்தால் நாளை மறுமையில் இறைவனின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. நூஹ் நபியின் மனைவி மற்றும் மகனின் நிலையைக் கவனித்தீர்களா? ஒரு நபியாலேயே அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாமல் போனது. அவ்விரு வரும் இறைவனின் தண்டனைக்கே ஆளானார்கள்.

எந்த ஒரு காரியமானாலும் பிஸ்மில்லாஹ் என்று கூறித் தொடங் கினால் அதன் மகத்துவமே தனிதான். இங்கு நூஹ் நபியவர்கள் – தாமும் இறைநம்பிக்கையாளர்கள் அனைவரையும் கப்பலில் ஏற்றிய பின்னர் பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று கூறித் தான் பயணத்தைத் தொடங்கினார்கள்! அனைவரும் பாதுகாப்பாய் கரை சேர்ந்தார்கள்! இதுபோன்று நாமும் எந்தச் செயலைச் செய்தா லும் பிஸ்மில்லாஹ் கூறுவதை மறந்திடக் கூடாது!

குர்ஆனில் 71 வது அத்தியாயத்தில் நூஹ் நபியவர்கள், அம் மக்களைத் திருத்துவதற்காக எப்படி எப்படியெல்லாம் முயற்சி செய் தார்கள் என்பது பற்றி இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

நூஹ் நபி பணிந்து கூறினார்: என் இரட்சகனே! நான் என் சமுதாயத்தினருக்கு இரவு பகலாக அழைப்பு விடுத்தேன் . . . . மீண்டும் நான் அவர்களை உரக்கக் கூவி அழைத்தேன். பின் வெளிப்படையாகவும் அவர்களுக்கு எடுத்துரைத்தேன். அந்தரங்கமாக வும் விளக்கினேன் . . . ! மேலும் நூஹ் நபியவர்கள் சத்தித்த கஷ்டங்கள், அந்த மக்களிடம் குடிகொண்டிருந்த பிடிவாதங்கள், மூர்க்கத்தனங்கள் எல்லாம் அந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன!

இவ்வளவுக்குப் பிறகும் அந்த மக்கள் திருந்தாதபொழுதுதான் அவர்களுக்குத் தக்க தண்டனை கொடுக்குமாறு அல்லாஹ்விடம் பரிந்துரைத்தார்கள் நூஹ்; நபியவர்கள்!

நாமும் இவ்வாறு தொடர்ந்து இஸ்லாமிய அழைப் பினை மக்களுக்கு விடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இறை வனையும் இறைத்தூதர்களையும் ஏற்றுக்கொள்ளுமாறும் அவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழுமாறும் மக்களுக்கு வழிகாட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

அதற்கான கூலியை அல்லாஹ்விடம் எதிர்பார்த்துத் தொடர்ந்து இப்பணிகளை ஆற்றிட வேண்டும்!
Share this article :

Post a Comment