(எம்.எம்.ஏ.ஸமட்)
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தேசிய பாடசாலைகளில் தற்காலிகமாகப் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களை நிரந்தரமாக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் தேசிய பாடசாலைகளில் ஆவண உதவியாளர்கள், புள்ளிவிபர செயற்பாட்டாளர்கள், புள்ளி விபர பதிவாளர்கள், மாணவர் விடுதி உதவியாளர்கள், மாணவர் விடுதிப் பொறுப்பாளர்கள், இரசாயன கூட உதவியாளர்கள், இரசாயன கூட சேவகர்கள், நூலக உதவியாளர்கள், நூலக சேவகர்கள், தொழிலநுட்ப உதவியாளர்கள், ஸ்ரியோ வகையின் இயந்திர செயற்பாட்டாளர்கள் போன்ற பதவிகளுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டோர் பல வருடங்களாக நிரந்தர நியமனம் இன்றி பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போதுள்ள வாழ்க்கைச் செலவின் நிமித்தம் நிரந்தமாக்கப்படாது தற்காலிகமாக தொழில் புரிவது பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு குறித்த பணியாளர்களை முகம்கொடுக்கச் செய்வதாகவும் தற்காலிக நியமனம் என்ற காரணத்தின் காரணமாக ஒரு சில கல்வி வலயங்களினால் குறித்த திகதிகளில் மாதாந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லையெனவும் சுட்டிக்காட்டும் பணியாளர்கள் தங்களை நிரந்தரமாக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை, மாகாண பாடசாலைகளில் கல்வி சாரா பணியாளர்கள் அவர்களின் சேவைக்காலம் கருதப்பட்டு பணியில் நிரந்தரமாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.