Home » » மனிதாபிமானம் பேசுவதற்கு நோர்வேக்கு அருகதை இருக்கிறதா?:பாதிக்கப்பட்ட தரப்பு கேள்வி

மனிதாபிமானம் பேசுவதற்கு நோர்வேக்கு அருகதை இருக்கிறதா?:பாதிக்கப்பட்ட தரப்பு கேள்வி

Written By Unknown on Sunday, August 4, 2013 | 2:26 AM


நோர்வே அரசாங்கமானது தனது நேரடி கண்காணிப்பில் இயக்கிவரும் சிறுவர் காப்பகங்களினூடாக நீண்ட கால திட்டத்தை வகுத்து ஒருவித இனச்சுத்திகரிப்பை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ள நோர்வே வாழ் வெளிநாட்டவர்கள் வந்தேறு குடிகளின் குடும்பங்களைச் சீரழித்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டுவதுடன் தமது மனவேதனையையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர்.

விருப்பமே இல்லாது தயவு தாட்சண்யம் காட்டாத வகையில் கதறக் கதற குழந்தைகளை கடத்தியும் பெற்றோரிடம் இருந்து பறித்தும் சில சந்தர்ப்பங்களில் பெற்றோரை அறைக்குள் தள்ளிப் பூட்டி விட்டும் குழந்தைகளை நோர்வே அரசாங்கம் சிறுவர் காப்பக அதிகாரிகளைப் பயன்படுத்தி கடத்திச் செல்வதாக ஆதாரபூர்வமாக தெரியவந்துள்ளது.

பாடசாலைகளில் இருந்தவாறு காப்பக வாகனங்களில் கடத்திச் செல்லப்படுகின்ற சிறுவர்கள் தொடர்பில் நாட்கணக்கிலும் வாரக்கணக்கிலும் பெற்றோருக்கு அறிவிக்காது ஒருவித மெத்தனப் போக்கிலும் சர்வாதிகாரப்போக்கிலும் செயற்பட்டு வருகின்ற நோர்வே அரசாங்கத்தினால் சர்வதேசத்தின் முன்னிலையில் மனிதாபிமானம் பற்றி பேசுவதற்கும் மனித உரிமைகள் பற்றி குரல் கொடுப்பதற்கும் என்ன அருகதை இருக்கின்றது என்று தமது பிள்ளைகளை சிறுவர் காப்பங்களிடம் பறிகொடுத்து நிற்கின்ற பாதிக்கப்பட்ட பெற்றோர் வெதும்புகின்றனர்.

நீதிமன்றங்களை இயக்கும் நோர்வே

இது இப்படியிருக்க தமக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை எடுத்துகூறி நீதிமன்றங்களிடம் நியாயம் பெறலாம் என்றும் நீதிமன்றங்களினூடாக தமது பிள்ளைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் நம்பிக்கையுடன் நீதிமன்றம் ஏறுகின்ற பாதிக்கப்பட்ட தரப்பினர் அங்கும் வஞ்சிக்கப்படுகின்றதாக கூறப்படுகின்றது.

தான்தோன்றித்தனமாக செயற்படும் உள்ளுர் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை எதிர்த்து மேன்முறையீடு செய்வதற்கோ அல்லது உச்சநீதிமன்றங்களையும் உயர் நீதிமன்றங்களையும் நாடுவதற்குகோ மறைமுகதடை ஏற்படுத்தப்பட்ட நிலைமை நோர்வேயில் இருந்து வருவதாக சொல்லப்படுகின்றது.

நோர்வேஜியன்கள் அதிருப்தி

நோர்வே அரசாங்கமானது வெளிநாட்டுச் சிறுவர்களை குறிவைத்து அவர்களை ஏதோவொரு காரணம் காட்டி பெற்றோரிடம் இருந்து பிரித்து வருடக்கணக்காய் தடுத்து வைத்திருப்பதும் பெற்றோரிடம் சிறுவர்களை ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுககாதிருப்பதும் அத்துடன் வந்தேறு குடிகளான வெளிநாட்டவர்களை நோர்வே அரசும் சிறுவர் காப்பகங்களும் இணைந்து வஞ்சிப்பதும் கண்டு நோர்வே நாட்டு பிரஜைகளே வெட்கமடைந்தும் அதிருப்தி தெரிவித்தும் வருகின்றனர் என்று நோர்வேயில் சிறுவர் காப்பகங்களுக்கு எதிரான அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

இலங்கை, இந்தியா, ரஷ்யா, ஈரான், ஈராக், சோமாலியர், லத்வியர், கானர், போலந்து, புரூண்டி, கொங்கேர், சிலி, லத்வேனியர், ருமேனியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வந்தேறு குடிகளின் சுமார் 16,000 க்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இவ்வாறு சிறுவர் காப்பகங்களில் சிக்குண்டிருப்பதாக நோர்வே நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

பாலியல் துன்புறுத்தல்

இதேவேளை கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் 52 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு இலக்காகியிருப்பதாகவும் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டனைக்குட்படுத்தப்பட்டிருப்பதாகவும் நோர்வே ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


கிழித்தெறியப்பட வேண்டும்.

நோர்வேயில் இருந்து வரும் சிறுவர் தொடர்பான சட்டங்களில் உள்ளவாறு சிறுவர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களது நலன்பேணுவதற்குமாகவே இனம்கண்டு பெற்றோரிடம் இருந்து சிறுவர்கள் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக கூறுகின்ற நோர்வே அரசு மேற்படி 52 சிறுமிகள் சிறுவர் காப்பத்தின் கண்காணிப்பில் இரு;நத சந்தர்ப்பங்களில் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர.; அப்படியானால் நோர்வே சிறுவர் சட்டம் இந்த நிலைக்கு என்ன பதில் கூறக் காத்திருக்கின்றது.

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டதாக நோர்வே அரசு கூறினாலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் மனோநிலை என்னவானது. அவர்களது கல்வி நிலை உளவியல் நடைமுறை எதிர்காலம் என்பன சீரழிக்கப்பட்டிருப்பது குறித்து நோர்வேயினால் நியாயம் கூறமுடியுமா ? அல்லது இதனை மூடிமறைக்கத்தான் முடியுமா என்பது நோர்வே வாழ் வெளிநாட்டவர்கள் மட்டுமல்லாது நோர்வே பிரஜைகளினதும் கேள்விகளாக உள்ளன.


வெளியுலகுக்கு கொண்டு வந்த உண்ணாவிரம்

வெளிநாட்டவர்களை இனங்கண்டு அந்த சமுகங்கள் நோர்வேயில் பெருகிவிடக்கூடாது என்றும் நீண்டகால அடிப்படையிலான திட்டங்களை வகுத்து வெளிநாட்டவர்களின் குழந்தைகளை குழந்தைகள் முதலாக நோர்வே பிரஜைகளாக மாற்றியமைக்கும் ஓர் இரகசியத்திட்டமானது ஒஸ்லோ டொம் தேவாலயத்தில் கடந்த 2012–09-30 முதல் 2012-10-09 வரையான 10 நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்ட இலங்கையைச் சேர்ந்த இரு தாய்மாரினால் உலக நாடுகளுக்கு படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
ஏமாற்றப்பட்டனர்

10 தினங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தாய்மாரின் கோரிக்கைகளை கண்டும் காணாதது போல் பாசாங்கு செய்த நோர்வே அரசு இந்த சந்தர்ப்பத்தில் டொம் தேவாலய நிர்வாகத்தை அணுகி அதனுடாக இந்த உண்ணா விரதப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

டொம் தேவாலய நிர்வாகத்துக்குட்பட்ட ஆயர் மட்டத்தினர் உண்ணா விரதப் போராட்டம் நடத்தியவர்களை அணுகி தங்களது பிரச்சினைகளை நோர்வே அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாகவும் கூறி உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலுயுறுத்தியதுடன் பின்னர் பேச்சுகளையும் நடத்தி உத்தரவாதங்களையும் வழங்கினர்.
எனினும் டொம் தேவாலய உத்தரவாதங்களும் காற்றில் பறக்கவிடப்பட்டவையாகின. இதன்மூலம் நோர்வே அரசுடன் இணைத்து டொம் தேவாலய நிர்வாகமும் இந்தத் தாய்மாரை ஏமாற்றி நோர்வே அரசுக்கு துணை போய்விட்டது.


போராட்டம் வெடிக்கும்

அனைத்து தரப்பினராலும் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டு தமது பிள்ளைகளை இழந்து நிற்கும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுப் பெற்றோர் தமது பிள்ளைகள் தமது கைக்கு வந்து சேரும் வரை தமது போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளதுடன் மிக விரைவிலேயே பாரியதொரு போராட்டம் வெடிக்கும் என்றும் அதனை எவராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

அனைத்து விடயங்களையும் உலகநாடுகளும் சர்வதேச மனித உரிமைகள் பேரவையும் உண்ணிப்பாக ஆராய்ந்து வருகின்றன என்பதையும் தற்போது நோர்வேயின் மனித உரிமை---- விடயம் கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பது குறித்து நோர்வே அரசு சிந்திக்கவேண்டும்.

ஐரோப்பிய நாடுகளில் சிறுவர் சட்டங்கள் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை நோர்வே அறிந்திராமல் இல்லை. எனினும் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைப்பதான இந்த சிறியதொரு விடயத்தை வைத்து நாடகம் ஆடிக்கொண்டிருப்பது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதையும் நோர்வே உணரவேண்டும்.

எனவே சிறுவர்களை ஏதோவொரு வழியில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சர்வதேச தலையீடுகளினுடாக பிள்ளைகள் பெற்றோரிடத்தில் சேரும் போது இன்று செல்வம் கொழிக்கும் நோர்வே பிற்காலத்தில் வறுமைக்குள் வீழ்வதை தடுக்க முடியாது என்பது மட்டும் உறுதியாகும்.

நீதிமன்றங்களை சுதந்திரமாக செயற்பட வழிவகுக்கப்படவேண்டும்.

பாதிக்கப்பட்ட தரப்பினரின் நியாயம் கேட்கப்படவேண்டும்.

பிள்ளைகளும் பெற்றோரும் சிறுவர் காப்பக அதிகாரிகளும் தனித்தனியே விசாரிக்கப்படவேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக பெற்றோரிடமிருந்து குறிப்பாக பெற்ற தாயிடமிருந்து குழந்தையைப் பிரித்து வருடக்கணக்கில் தடுத்துவைத்திருக்கும் அடிப்படையற்ற செயற்பாடு குறித்து நீதிமன்றம் சித்திப்பதுடன் நீதித்துறையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும்.

இவ்விடயத்தில் சர்வதேசத்தின் அழுத்தங்கள் அதிகரிக்கப்படவேண்டும்.

தமது பிள்ளைகள் தம்மிடத்தில் வந்து சேர வேண்டும்.

இவையே பாதிக்கப்பட்டோரின் கோரிக்கைகளாகும்.
Share this article :