Home »
சர்வதேச செய்திகள்
» எல்லையில் அத்துமீறலைக் கண்டித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்
எல்லையில் அத்துமீறலைக் கண்டித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்
Written By Unknown on Friday, August 23, 2013 | 9:46 PM
இந்திய ராணுவத்தினர் எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ள பாகிஸ்தான், அதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்தியாவுடனான ஆக்கப்பூர்வமான உறவுக்கும் பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே 2003-ம் ஆண்டில் போர் நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக பரஸ்பரம் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர் சர்ஃபராஸ் கான் உயிரிழந்து விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், இந்திய ராணுவத்தின் நடவடிக்கையைக் கண்டித்து பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தீர்மானம் கொண்டு வந்தது. இத்தீர்மானத்தை பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ரன தன்வீர் கொண்டு வந்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களால் இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தில், இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. எல்லைப் பகுதியில் நிகழ்ந்து வரும் சம்பவங்களுக்கு பாகிஸ்தான் வருத்தம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இதேபோன்ற தீர்மானம் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியான பாதல் மற்றும் நக்யால் பிரிவுகளில் இந்திய ராணுவத்தினர் புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு ஆலோசனை: எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து ஆலோசிக்க பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் அமைச்சரவையின் பாதுகாப்பு குழு வியாழக்கிழமை கூடியது. பிரதமராகப் பொறுப்பேற்ற பின், முதன்முறையாக ஷெரீப் இக்கூட்டத்தில் பங்கேற்றார். இதில் முப்படைத் தளபதிகள், பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
"பயங்கரவாதத்துக்கு எதிரான போர், பாகிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு நிலவரம், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நிலவும் பதற்றம், வெளிநாட்டுக் கொள்கைகள்' உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Labels:
சர்வதேச செய்திகள்
Post a Comment