இலங்கையில் இவ்வருடம் சஹ்பான் மாதம் 29 நாட்களில் முடிவுற்று, ரமழான் நோன்பு ஆரம்பமான பொழுது, சனிக்கிழமை பெருநாள் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பது ஊர்ஜிதமானது.
நோன்பு ஆரம்பமாகி ஓரிரு வாரங்களிலேயே பெருநாள் வியாழக்கிழமை வருமா, வெள்ளிக்கிழமை வருமா என்ற வாதமும் உள்ளூர் முஸ்லிம்கள் மத்தியில் ஆரம்பமாகி விட்டிருந்தது.
“வெள்ளிக்கிழமை பெருநாள் வந்து இரண்டு குத்பா நடைபெற்றால் நாட்டின் தலைவருக்கு நல்லதல்ல, ஆகவே எப்படியும் வியாழக்கிழமை பெருநாளை எடுக்க வைத்து விடுவார்கள்” என்று சாஸ்திர மூட நம்பிக்கை அடிப்படைகளைக் கருத்தில் கொண்டு ஒரு சாராரும், “வியாழக்கிழமை பெருநாள் வந்தால், லீவுக்கும் இல்லாமல், வேலை நாளுக்கும் இல்லாமல் தொய்வடைந்த இரண்டும் கெட்டான் நிலைக்கு வெள்ளிகிழமை ஆகிவிடும், ஆகவே வார இறுதியுடன் சேர்ந்து மூன்று நாட்கள் லீவு வரும்படியாக வெள்ளிக்கிழமை தான் பெருநாள் என்று அறிவிக்க வைப்பார்கள்” என்று வர்த்தக, பொருளாதார அடிப்படைகளைக் கருத்தில் இன்னொரு சாராரும் கருத்து சொல்லிக்கொண்டு இருந்தனர்.
இப்பொழுது அந்த எதிர்பார்த்த நாளும் வந்து, பெரும் சர்ச்சையையும் கிளப்பி விட்டுள்ளது.
கிண்ணியாவில் பிறை தென்பட்டது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ள நிலையிலும், உலமா சபையின் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாக மேலோட்டமான பார்வைக்குத் தென்படுகின்றது.
இந்த நிலையில், முகநூல்களிலும், வலைத்தளங்களிலும் மட்டுமின்றி, தொலைபேசி உரையாடல்களிலும் உலமா சபை மிக மோசமாக விமர்சிக்கப் பட்டு, உலமா சபையின் மதிப்பு முஸ்லிம்களின் மனதில் இருந்த இடத்தில் இருந்து அதள பாதாளத்தை நோக்கி விழுந்துகொண்டு இருக்கும் ஒரு நிலையை காணக் கூடியதாக உள்ளது.
கூட்டத்துடன் கோவிந்தா என்று நாமும் சேர்ந்துகொண்டு உலமா சபையை விமர்சித்து, இரண்டில் ஒன்று பார்த்தாகவேண்டும் என்று கோதாவில் குதிப்பதை விடுத்து, இந்த தீர்மானத்தை உலமா சபை மேற்கொண்டமையின் பின்னணியில் இருக்கக் கூடிய சதிகள் குறித்தும், அதன் பின் விளைவுகள் சற்று சிந்திக்க வேண்டும்.
உலமா சபை திட்டமிடப் பட்ட வகையில் ஒரு இக்கட்டில் தள்ளிவிடப் பட்டுள்ளதாகவே உணர முடிகின்றது.
ஹலால் இலட்சினைப் பிரச்சினையில் ஆரம்பித்து, உலமா சபையை இல்லாமலாக்க இலக்கு வைத்து இனவாத சக்திகள் காய் நகர்த்த ஆரம்பித்தன.
பேரினவாத சக்திகள் போற்றிப் புகழும் பாரம்பரிய முஸ்லிம்கள் என்ற இஸ்லாமிய அடிப்படை சாரா குறுகிய வட்டத்துக்குள் உலமா சபை அடங்காத நிலையில், உலமா சபையை பலமிழக்க வைத்து செயலிழக்கப் பண்ண பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டதனை ஊடகங்கள் மூலம் அறிய முடியுமாக உள்ளது.
பேரினவாத சக்திகளின் உள்நாட்டுப் போஷகர்கள் யார் என்பதனை அனைவரும் அறிந்த நிலையில், குறித்த போஷகர்கள், ஏற்கனவே பலவீனப்பட்டுள்ள உலமா சபை மீது பாரிய ஒரு அழுத்தத்தைப் பிரயோகித்து, மிகத் தெளிவாக அனைவரும் உணரும்படியான தவறான முடிவொன்றை பெருநாள் போன்ற முக்கிய விடயத்தில் மேற்கொள்ள வைத்து, அதன் மூலம் முஸ்லிம்களைக் கொண்டே உலமா சபையை தூக்கி ஏறிய வைத்து தமது இலக்கை அடைந்து கொள்ளும் சாத்தியம் மிகத் தெளிவாகவே உள்ளது.
வெள்ளிக்கிழமை பெருநாள் என்கின்ற தவறான முடிவை சர்ச்சைகளுக்கு மத்தியில் மேற்கொண்ட நிலையில், உலமா சபையின் முக்கிய பிரமுகர்கள் தொடர்புகொள்ளப் பட முடியாத நிலையில் உள்ளனர் என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களால் கூட உலமா சபைத் தலைவரை தொடர்புகொள்ள முடியாமல் போயுள்ளது எனும் பொழுது, இந்த சர்ச்சைக்குரிய முடிவின் பின்னணியில் சதிகள் இருப்பதற்கான சாத்தியங்கள் மறுக்கப் படுவதற்கில்லை.
ஒவ்வொரு தனிப்பட்ட முஸ்லிமும் கிண்ணியாவில் தென்பட்ட பிறை சரி என்பதனை ஏற்றுக் கொண்டு, உலமா சபையின் முடிவை நிராகரித்து பெருநாளைக் கொண்டாடுவதோ, அல்லது நோன்பும் இன்றி பெருநாளும் இன்றி இரண்டும் கெட்டானாக இருப்பதோ இன்னொரு கோணத்தில், தலைப்பில் அணுகப்பட வேண்டிய விடயம்.
எனினும், இந்த சந்தர்பபத்தில் உலமா சபையை மேலும் பலவீனப்படுத்தி, அதன் வீழ்ச்சிக்கு துணை போவது, கோடாரிக்கு மரம் காம்பு கொடுத்தது போன்றாகி விடும்.
இன்றைய திகதியில் உலமா சபை சற்று பலமிழந்து காணப்பட்டாலும், இன்று நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இதே நிலைமைதான் தொடர்ந்தும் இருக்க அல்லாஹ் அனுமதிக்கப் போவதில்லை என்னும் பொழுது, நாளை உலமா சபை வீரியம் கொண்டெழுந்து செயல்படும், இன்ஷா அல்லாஹ். ஆகவே அதற்காக வேண்டி, உலமா சபையை பாதுகாப்பது நமது பொறுப்பும் கடமையும் ஆகும்.
இன்று நாட்டில் உள்ள 99% பள்ளிவாசல்கள் உலமா சபையின் வழிகாட்டலின் படியே செயற்படுகின்றன. சுமார் 100 வருட பாரம்பரியம் மிக்க உலமா சபையை நாம் இழந்தோம் என்றால், நமது மார்க்க விடயங்கள் அனைத்தினதும் முடிவுகள் புத்த சாசன அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம்.
நாட்டில் நிலைமை மாறினாலும், எதிர்காலத்தில் இன்னொருதடவை உலமா சபை போன்ற நமக்கான அமைப்பொன்றை கட்டியெழுப்ப முடியாமலே போகலாம்.
உலமா சபை தொடர்ந்தும் சிறிது காலத்திற்கு ஒரு சில தவறான முடிவுகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப் படலாம். நாம் தவறான முடிவுகளை மட்டும் தூக்கிக் குப்பையில் வீசிவிட்டு, உலமா சபையைப் பாதுகாப்போம், இன்ஷா அல்லாஹ் நமக்கென்று ஒரு நாளின் உதயம் காத்திருக்கும், அந்த உதயத்தின் ஒளி தொடரும்.
(சுவைர் மீரான்)
Post a Comment