சிரிய தலைநகர் டமஸ்கஸின் புறநகர் பகுதிகளில் நேற்று நடத்தப்பட்ட இரசாயன குண்டுத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டின் எதிர்த்தரப்பு செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிரிய அரச படை கெளதா பிராந்தியத்தில் நேற்று அதிகாலை இரசாயன குண்டுகளை இணைத்து ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியதாக சிரிய உள்நாட்டு யுத்தம் தொடர்பில் கண்காணித்து வரும் இரு குழுக்கள் உறுதி செய்யதுள்ளன.
எனினும் இந்த குற்றச்சாட்டை நிராகரித்திருக்கும் சிரிய அரசு இது அடிப்படை அற்றது என்று குறிப்பிட்டுள்ளது. சிரியாவில் இடம்பெறும் இரசாயன தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. குழு அங்கு சென்றுள்ள நிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புறநகர் பகுதிகளான சமல்கா, அர்பீன் மற்றும் ஈன்டர்மா ஆகிய பகுதிகளிலேயே நேற்றைய தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக பிரிட்டனை மையமாக கொண்டு இயங்கும் சிரியா தொடர்பில் கண்காணிக்கும் மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது. இந்த தாக்குதலில் 500க்கும் அதிகமானவர்கள் பலியாகியிருப்பதாக அஞ்சப்படுகிறது.
எனினும் இந்த தாக்குதலில் 650 க்கும் அதிகமானவர்கள் பலியாகியிருப்பதாக ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு எதிராக போராடும் எதிர்த் தரப்புகளின் கூட்டணியான சிரிய தேசிய கூட்டணி குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சிரியாவில் இருக்கும் ஐ.நா. இரசாயன ஆயுத ஆய்வாளர்கள் இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள் ளனர்.
இந்த தாக்குதலில் பலர் பலியாகி இருப்பதை காட்டும் புகைப்படங்கள் இதன் அபாயத் தன்மை குறித்து அவதானத்தை ஏற்படுத்துகிறது என சுவீடன் நாட்டு விஞ்ஞானியான அகெ செல்ட் ரோம் டி.டி. செய்திச் சேவைக்கு விபரித்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபையின் அவசர கூட்டத்திற்கு எதிர்த் தரப்பு சிரிய தேசிய கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. இது சிரிய அரசின் படுகொலைச் செயல் என அந்த கூட்டணியின் தலைவர் அஹ்மட் அல் ஜர்பா குற்றம்சாட்டினார்.
இது தொடர்பில் ஆய்வு நடத்துமாறு கெய்ரோவை தலைமையகமாக கொண்டு செயற்படும் அரபு லீக் ஐ.நா.வுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. சிரியாவில் இரசாயன ஆயுத தாக்குதல் குறித்து அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் கடந்த காலங்களில் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். எனினும் இது தொடர்பில் சுயாதீனமான விசாரணைக்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் கூறி வருகின்றன. சிரியாவிடம் கணக்கில் இல்லாத பெருமளவான இரசாயன ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாக குற்றம்சாட்ட ப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Home »
சர்வதேச செய்திகள்
» சிரியாவில் இரசாயன தாக்குதல்: நூற்றுக்கணக்கானோர் பலி
சிரியாவில் இரசாயன தாக்குதல்: நூற்றுக்கணக்கானோர் பலி
Written By Unknown on Wednesday, August 21, 2013 | 7:17 PM
Labels:
சர்வதேச செய்திகள்
Post a Comment