எமது நாட்டு மக்கள் எம்மை வெற்றியாளர்களாக எதிர்காலத்திலும் முன்னேற்றிச் செல்வார்களென்ற நம்பிக்கை எமக்குண்டு,
ஜெனீவாவில் வெற்றியோ தோல்வியோ அது எமக்குப் பிரச்சினையில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். விசாரணைகள் நடத்தப்பட்டால் அது யுத்தம் ஆரம்பித்த காலம் தொட்டு நடத்தப்பட வேண்டும். கடைசி ஐந்து நாள் என்றோ, 2010 ற்குப் பிறகோ நடத்தப்படக் கூடாது. இவ்வாறு செயற்படுவது சிலரைப் பாதுகாக்கவே என்பதை நாம் அறிவோம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொழும்பு மாளிகாவத்தையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, கொழும்பு நகரில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள அபிவிருத்திகளை அனைத்து மக்களும் அறிவர். 30 வருட காலம் இந்த நாட்டில் கொடூரமான யுத்தம் நிலவியது. இந்த யுத்தத்தில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்களென அனைத்து இன மக்களும் கொல்லப்பட்டனர்.
இது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தமல்ல. இது இனவாத யுத்தமுமில்லை. அன்று பிரபாகரன் என்ற பயங்கரவாதி ஏற்படுத்திய பயங்கரவாத நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எமது பொறுப்பாக அமைந்தது.
இரண்டு மணித்தியாலங்களில் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் விரட்டப்பட்டனர். அதற்கு முன்னரே சிங்களவர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டு விட்டனர். தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். துரையப்பாவில் ஆரம்பிக்கப்பட்ட படுகொலை அமிர்தலிங்கம், சாம் தம்பிமுத்து, அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் என தொடர்ந்தது.
இந்த வகையில் அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், காமினி திசாநாயக்க போன்ற அமைச்சர்கள், ஜனாதிபதியான ஆர். பிரேமதாச, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி போன்றோரும் கொல்லப்பட்டனர்.
இதுபோன்று படுகொலை அலை நாட்டில் தொடர்ந்தது. அத்தகைய பயங்கரவாதத்துக்கே நாம் முற்றுப்புள்ளி வைத்தோம் என்றும் ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிட்டார்.
Post a Comment