Home » » மட்டக்களப்பு : முஸ்லிம்கள் காணிகளை வாங்குவதற்கு எதிராக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் Lankamuslim.org

மட்டக்களப்பு : முஸ்லிம்கள் காணிகளை வாங்குவதற்கு எதிராக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் Lankamuslim.org

Written By Unknown on Thursday, March 13, 2014 | 7:22 PM

TNAமட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட ஐயங்கேணி, பாரதி கிராமம், மணிபுரம் கிராமங்களை சேர்ந்த  காணிகளை முஸ்லிம் அத்துமீறி கபளீகரம் செய்வதாக கூறி புதன்கிழமை கவன ஈர்ப்பு கூட்டங்ளை நடாத்தியுள்ளனர்
 இவ்ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், பிரசன்னா இந்திரகுமார், செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.மோகன் மற்றும் பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட ஐநூறுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்
செங்கலடி ஐயங்கேணி நரசிங்க வைரவர் ஆலயத்திற்கு முன்பாக காலை 10 மணியளவில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் அத்துமீறிய காணி அபகரிப்புக்கள் நிறுத்த வேண்டும், முஸ்லிம் கிராம சேவகரை மாற்றி தமிழ் கிராம சேவையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும், ஐயன்கேணி பகுதியில் புதிய முஸ்லிம் கிராமங்களை உருவாக்குவதை நிறுத்த வேண்டும் போன்ற மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஐயன்கேணி மக்கள் ஆர்ப்பாட்ட கூட்டத்தினை நடத்தியிருந்தனர்.
இது குறித்து ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதரிடம்;  கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
மேற்படி கூட்டத்தில் ”ஐயங்கேணி பொதுமக்களால்” ´எங்களது கிராமங்களை கபளீகரம் செய்யாதீர்கள்´ என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டது. அதில் காணப்பட்டவையாவன:
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட ஐயங்கேணி, பாரதி கிராமம், மணிபுரம் கிராமங்களை ஊடறுத்து முஸ்லிம்கள் சிலரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்துமீறிய காணி அபகரிப்பு மற்றும் தமிழர்களின் கலாச்சார அடையாளங்கள் மீதான ஆக்கிரமிப்பு மற்றும் திட்டமிட்ட முறையில் சட்ட ஆவணங்களையும், பொருளாதாரத்தையும் பயன்படுத்தி எமது கிராமங்களை சுற்றிவளைத்து மேற்கொள்ளப்படும் குடியேற்றத் திட்டங்களையும் உடன் நிறுத்துமாறு ஐயன்கேணி பொது மக்களாகிய நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
ஒரு குறிப்பிட்ட இனம் தனது மத, கலாச்சார, இன அடையாளங்களையும், அது சார்ந்த தனித்துவங்களையும் பாதுகாத்துக் கொண்டு இன்னுமொரு இனத்தின் மத, கலாச்சார, இன அடையாளங்கள் மீது சட்டம், பொருளாதாரம் போன்றவற்றை பயன்படுத்தி ஆக்கிரமிப்புச் செய்வதை நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
கடந்த 1954ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை எமது வரலாற்று ரீதியான பூர்வீக காணிகளாக இருந்த எமது நிலங்களை இன்று தங்களிடம் சட்ட ரீதியான ஆவணங்கள் உண்டு என்று கூறிக்கொண்டு தங்களுக்கு அரசாங்கத்திடம் உள்ள செல்வாக்கினை பயன்படுத்தி பொய்யான ஆவணங்களை தயாரித்து எங்களது காணிகளை கபளீகரம் செய்வதை நாம் இனியும் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது.
எமது சகோதர இனமாகவுள்ள முஸ்லிம்கள் தங்களது பகுதிகளை மட்டும் மத, இன ரீதியான தனித்துவம் வாய்ந்த பகுதிகளாக பாதுகாத்து வருவதுடன், தங்களது பகுதிகளுக்குள் தமிழ் மக்களுக்கு ஒரு காணித்துண்டையோ அல்லது ஒரு வர்த்தக நிலையத்தையோ வழங்குவதற்கு தயாராக இல்லை என்பதுடன், அதனை முஸ்லிம் தலைமைகள் அனுமதிப்பதும் இல்லை.
இவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்களது பகுதிகளில் மட்டும் முஸ்லிம் மக்கள் அத்துமீறி தங்களது மத, கலாசார, இன அடையாளங்களை தினிப்பதையும், எங்களது காணிகளையும், வர்த்தக நிலையங்களையும் கொள்வனவு செய்வதையும் நாம் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்.
இன்று எமது ஐயன்கேணி கிராமத்தை சுற்றி வளைத்து முஸ்லிம்கள் சிலர் முஸ்லிம் அமைச்சர்களின் உதவிகளுடன் எமது பூர்வீக வாழ்விடங்களை ஊடறுத்து காணிகளை பிடித்து எமது கிராமங்களை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.
எமது இந்து மதஸ்தலங்கள், இந்து மயானம் உள்ளிட்ட தமிழ் மக்களது கலாசார ரீதியான அடையாங்களை ஊடறுத்து காணிகளை கபளீகரம் செய்துள்ளதுடன், புதிய குடியேற்றத் திட்டங்களை உருவாக்கி புதிய முஸ்லிம் கிராமங்களையும் அமைத்துள்ளனர்.
மேற்படி நடவடிக்கையானது எமக்கு ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்கால சந்ததியினரின் கலாசார ரீதியான வாழ்வியலையும் கேள்விக் குறியாக்கியுள்ளது. அத்தோடு இரண்டு முரண்பட்ட மத, இன, கலாசார அடையாளங்களை கொண்ட மக்களில் ஒரு இனத்தின் மத, இன, கலாசார அடையாளங்களை அழிக்க முற்படும் இது போன்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் இன நல்லுறவில் பாதிப்பையும், பகமையையும் உண்டாக்க கூடும்.
எனவே மேற்படி வியடங்களை கருத்தில் கொண்டு எமது கிரமங்களை ஊடறுத்து முஸ்லிம் தலைமைகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி அபகரிப்பு மற்றும் தமிழர்களின் கலாச்சார அடையாளங்கள் மீதான ஆக்கிரமிப்பு மற்றும் திட்டமிட்ட முறையில் சட்ட ஆவணங்களையும், பொருளாதாரத்தையும் பயன்படுத்தி எமது கிராமங்களை சுற்றி வளைத்து மேற்கொள்ளப்படும் குடியேற்றத் திட்டங்களையும் உடன் நிறுத்துமாறு இதனூடாக வேண்டுகோள் விடுக்கின்றோம் என மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.-AD_TC
TNA2
Share this article :

Post a Comment