(அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் றிஸ்வி முப்தி www.jaffnamuslim.com ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலே இது)
1) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
ஒரு சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடைய நோக்கமாகும். இன்று மட்டுமல்ல ஜம்இய்யா ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இந்நோக்கை இலக்காகக் கொண்டே இயங்கி வருகின்றது.
அல்லாஹுதஆலாவுடைய ஏவல் விலக்கல்களை சிரமேற்கொண்டு தங்களது அனைத்து செயற்பாடுகளையும் அமைத்துக் கொள்ளக் கூடியவர்களாக, ஐவேளைத் தொழுகைகளை இறையச்சத்தோடு தொழுதுவரக் கூடியவர்களா, பெரும்பாவங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்து அல்லாஹுதஆலாவின் அருளையும் றஹ்மத்தையும் அடைந்துகொள்ளக் கூடியவர்களாக ஒவ்வொருவரும் மாறவேண்டும். தங்களுக்கு மத்தியில் ஒருவர் மற்றவரை புரிந்து, மதித்து, தங்களது தேவைகளைவிட பிறரது தேவைகளை முற்படுத்தி, விட்டுக் கொடுத்து, அன்போடு ஐக்கியத்தோடு வாழ்ந்து சமூக ஒற்றுமையைப் பாதுகாப்பதோடு பிறமத சகோதரர்களுடன் இஸ்லாம் கூறும் பிரகாரம் சக வாழ்வைப் பேணி வாழக் கூடிய சிறந்த சமூகம் ஒன்றை உருவாக்குவதே ஜம்இய்யாவின் நோக்கமாகும்.
விவசாயத்தின் வளர்ச்சிக்கு தண்ணீர் உதவுவதுபோன்று ஜம்இய்யா அனைத்து நலவுகளுக்கும் காரணமாக அமையவேண்டுமென்பதே ஜம்இய்யாவின் குறிக்கோளாகும். இஸ்லாம் வணக்க வழிபாடுகளை மாத்திரம் சொல்லிக் கொடுக்கும் மார்க்கமல்ல. ஒரு நாய்க்கு தண்ணீர் புகட்டியதால் துர்நடத்தையுள்ள ஒரு பெண் மன்னிக்கப்பட்டு சுவனம் நுழைவிக்கப்படுகிறாள், ஒரு பூனையை கட்டிப்போட்டு தான் அதற்கு உணவழிக்கவுமில்லை அது தனது உணவைத் தேடிக் கொள்ள இடமளிக்கவுமில்லையென்பதால் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் நரகம் நுழைவிக்கப்படுகிறாள் என்பது நபிமொழியாகும். எனவே யாரும் ஜம்இய்யாவின் செயற்பாடுகளால் நஷ்டமடைந்துவிடக் கூடாது. மனிதாபிமான அடிப்படையில் பிறமதசகோதரர்களுடன் நல்லுறவை வளர்த்து சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். அவர்களும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் புரிந்து தெரிந்து முஸ்லிம்களுடன் நன்றாக நடந்துகொள்ள வேண்டும்.
எமது சக்திகள், வளங்கள் சண்டைசச்சரவுகளில் வீணாகாமல் சமூகத்துக்ககு பிரயோசனமான பணிகளில் ஒன்று படும்போது இன்ஷா அல்லாஹ் இது மிகவிரைவில் சாத்தியமாகும். இதனை அடைந்துகொள்ள உலமாக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். உலமாக்கள் கிளைவிவகாரங்களில் மாற்றுக் கருத்துக்கொண்டோரை மதித்து நடக்கவேண்டும். தமது சுய விருப்பு வெறுப்புகளுக்கப்பால் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்.
2)அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவராக பணியாற்றிய காலகட்டத்தில் எதிர்கொண்ட கசப்பான சம்பவமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?
'ஒரு முஃமினுடைய விடயம் ஆச்சரியமாக இருக்கின்றது. அவனுடைய அனைத்து விடயங்களும் நலவாகவே அமைந்துவிடுகிறது. இது ஒரு முஃமினைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. ஒரு முஃமினுக்கு நலவுவந்தால் அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றான் எனவே அது அவனுக்கு நலவாக அமைந்துவிடுகிறது. ஒரு முஃமினுக்கு கஷ்டங்கள் வந்தால் அவன் அதிலே பொறுமை செய்கிறான் அதுவும் அவனுக்கு நலவாகவே அமைந்துவிடுகிறது'சஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தில் பதிவாகியுள்ள இந்த நபிமொழிக்கு முன்னால் என்னால்எதைத்தான் கசப்பென்று சொல்ல முடியும்.
3)ஹலால் விடயத்தில் ஜம்இய்யா தோல்விடைந்துவிட்டதாக முஸ்லிம்களில் ஒரு தொகையினர் இன்னும் நம்புகிறார்களே அதுபற்றிய உங்கள் அபிப்பிராயம் யாது?
யுத்தத்துக்கு சென்று புறமுதுகு காட்டி ஓடி வருவதுபோன்று பாரமெடுத்த ஒரு விடயத்தை எங்களால் செய்ய முடியாது என்று இடைநடுவில் கைவிடுவதுதான் தோல்வியாகும். உண்மையில் ஹலால் விவகாரத்தை ஜம்இய்யா அவ்வாறு பார்க்கவில்லை. ஹலால் சான்றிதழ் வழங்கும் பணியை பொறுப்பேற்ற நாள் முதல் ஜம்இய்யா இதனை மிகச் சிறப்பாக செய்து வந்தது. 2000ஆம் ஆண்டு இரண்டு அறுப்பு பண்ணைகளுக்கு சான்றிதழ் வழங்கி தனது சேவையை ஆரம்பித்தது. 2004 ஆண்டு உணவு விஞ்ஞான, விவசாய, இரசாயன துறைசார் நிபுணர்களை உள்ளீர்த்து உணவுச்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள் போன்ற ஏனைய பிரிவுகளுக்கான சான்றிதழ் வழங்கல் நடவடிக்கை விரிவாக்கியது.
இதனைத் தொடர்ந்து ஹலால் சம்பந்தமான வெளிநாட்டு விஜயங்களினதும்; சந்திப்புக்களினதும், பயிற்சிகளினதும்; ஒப்பந்தங்களினதும் அவசியம் உணரப்பட்டது. அவ்வடிப்படையில் 2005 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் 2009 ஆண்டு (IFCE) பெல்ஜியதுக்கும் 2010 ஆண்டு மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் 2011 மலேசியாவுக்கும் 2012 ஆண்டு (CICOT) தாய்லாந்து மலேசியா,இந்தோனேசியா,சிங்கப்பூர் (MUI, MUIS & JAKIM) ஆகிய இடங்களுச் சென்று ஹலால் சம்பந்தமான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
2010 ஆம் ஆண்டு ஜுலை 19ஆம் திகதி ஜேர்மனியைச் சேர்ந்த ஹலால் கொன்றோல் நிறுவனத்துடன் கூட்டிணைந்தது.
2011 ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி மலேசியாவைச் சேர்ந்த International Halal Integrity Alliance, நிறுவனத்தில் அங்கத்துவம் பெற்றது.
2012ஆம் ஆண்டு ஆகஸ்ட 14 ஆம் திகதி; SAARC ஹலால் கவுன்சிலில் அங்கத்துவம் பெற்றதுடன்; அதே வருடம் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி தாய்லாந்து ஹலால் விஞ்ஞான நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றையும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி (IFANCA) ஐக்கிய அமெரிக்க ஹலால் சான்றிதற்படுத்தல் நிறுவனத்துடன் மற்றுமொரு ஒப்பந்தத்தையும் கைச் சாத்திட்டது.
2013 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் திகதி அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த AFIC நிறுவனத்துடனும் பெப்ரவரி 20 ஆம் திகதி பெல்ஜியத்தைச் சேர்ந்த IFCE நிறுவனத்துடனும் கூட்டிணைந்தது.
2013ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதி World Halal Food Council (WHFC) இந்தோனேசியாவின் அங்கத்துவம் பெற்றது.
அவ்வாறே ஜம்இய்யவின் ஹலால் அத்தாட்சிப் படுத்தற்பிரிவு ஹலால் இந்தியாவுடன் கூட்டிணைந்துள்ளதுடன் SANHA, தென்னாபிரிக்கா ஹலால் சான்றிதற்படுத்தல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்துள்ளது.
2000ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஹலால் அத்தாட்சிப் படுத்தற் சபையில் 2004 ஆம் ஆண்டு வரை இரண்டு நிறுவனங்கள் மாத்திரமே சான்றிதழ் பெற்றிருந்தன. அதன் பிறகு 2004ஆம் ஆண்டு 2 நிறுவனங்கள், 2005ஆம் ஆண்டு 1 நிறுவனம், 2006ஆம் ஆண்டு 10 நிறுவனங்கள், 2007ஆம் ஆண்டு 16 நிறுவனங்கள், 2008ஆம் ஆண்டு 39 நிறுவனங்கள், 2009ஆம் ஆண்டு 41 நிறுவனங்கள், 2010ஆம் ஆண்டு 29 நிறுவனங்கள், 2011ஆம் ஆண்டு 35 நிறுவனங்கள், 2012ஆம் ஆண்டு 41 நிறுவனங்கள், 2013ஆம் ஆண்டு 61 நிறுவனங்கள் என்ற அடிப்படையில் புதிய புதிய நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் பெற்றுக்கொண்டன.
ஹலால் சான்றிதழ் வழங்கும் பணியை பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் அது அவர்களது உணர்வகளைப் புண்படுத்துவதாகக் கருதினர். உங்களுக்குத் தேவையென்றால் ஹலாலை வைத்துக்கொள்ளுங்கள் எதற்காக எங்களுக்கு உங்களுடைய ஹலால் சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களைத் தருகிறீர்கள் என்பதுதான் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டம்.அவர்கள் இதனை வெளியாக்கிய விதம் மிகவும் கவலைக்குரியது.உண்மையில் அதை சரியான முறையில் அவர்கள் அணுகியிருந்தால் அதற்கான மிக நல்லதொரு தீர்வை ஜம்இய்யா எடுத்திருக்கும்.
ஹலால் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு பின்வரும் இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் தீர்வு காணப்பட்டது.
* ஜம்இய்யாவினால் ஹலால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பொருட்களில் ஜம்இய்யாவின் ஹலால் சின்னத்தைப் பொறிப்பது நிறுவனங்களின் விருப்பத்தில் விடப்படும்.
* ஜம்இய்யா ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையை இலவசமாகச் செய்ய வேண்டும்.
மேற்கூறப்பட்ட இரண்டு தீர்மானத்துக்கமையவே ஜம்இய்யா தனது ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையை தற்பொழுது நடாத்தி வருகின்றது. எனினும் இவ்வளவு பெரிய பணியை இலவசமாகச் செய்வது ஜம்இய்யாவுக்கு பெரும் சுமையாகவே இருக்கிறது.
ஜம்இய்யாவினால் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட நிறுவனங்கள்,பொருட்கள் சம்பந்தமான பூரண தெளிவை முஸ்லிம்கள் பெற்றுக் கொள்வதற்காக ஜம்இய்யா 0117425225 எனும் இலக்க விஷேட தொலைபேசி சேவையொன்றை ஆரம்பித்து வைத்துள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 1500 தொலைபேசி அழைப்புக்கள் வந்தவண்ணமுள்ளன. இதிலிருந்து பொதுமக்கள் இதன் பக்கம் எவ்வளவு தேவையுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது அறிய முடிகிறது.
இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற மலேசியாவின் துயுமுஐஆ நிறுவனத்தின் உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து ஜம்இய்யாவின் ஹலால் அத்தாட்சிப் படுத்தற் முறையை பரசீலித்துச் சென்று அதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருக்கின்றது. இதனைவைத்து பொதுமக்கள் உண்மை நிலையை ஊகித்துக் கொள்ள முடியும்.
றஸுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹுதைபியா உடன்படிக்கையின்போது விட்டுக்கொடுத்ததே வெற்றிக்கு காரணமாக அமைந்தது.ஜம்இய்யா பெரும்பான்மை சகோதரர்களின் உணர்வுகளை மதித்த வண்ணம் முஸ்லிம்களின் தேவைகளைக் கவனத்திற்கொண்டு இவ்விடயத்தில் செயற்பட இருக்கிறது. எனவே வெற்றிதோல்வி என்று பெயர் சூட்டாமல் நடந்தவற்றிலிருந்து படிப்பினை பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதே சிறந்ததாகும்.
10) இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்த வேண்டுமா?
எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்ளவெண்டும் என்பதுதான் அரசியலில் முதிர்ந்த எமது முன்னோர்களின் நிலைப்பாடாகும். அதற்கு பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு விடயத்திலும் நாம் அத்துறைசார்ந்தவர்களிடமிருந்தே படிப்பினை பெறவேண்டும். அந்தவகையில் ஜம்இய்யாவின் நிலைப்பாடும் இதுவாகவே இருக்கின்றது. இலங்கையில் முஸ்லிம்களின் வரவலாறு சம்பந்தமாக கலாநிதி லோனா தேவறாஜ் அவர்கள் எழுதியிருக்கும் தனது நூலிலும் முஸ்லிம்கள் வரலாற்று நெடுகிலும் வேறெந்த வெளிசக்திகளுக்கும் பேரம் போகவில்லை என்பதாகப் புகழ்ந்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
11) சர்வதேச உலமாக்கள் மற்றும் அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுபவர் என்ற வகையில் இலங்கை முஸ்லிம்கள் குறித்து எவருடனாவது பேச்சுக்களை நடத்தியுள்ளீர்களா?
எல்லா நாட்டிலும் மேற்சொன்னவைகளையே சொல்லிவருகிறேன் இரகசியமாகப் பேசுவதற்கு எனக்கு எதுவும் கிடையாது. எங்களுக்கு இரண்டு முகம் இருக்க முடியாது. இரண்டு முகம் என்பது ஒரு முஃமினுடைய தன்மையல்ல. இந்த பிரச்சினைக்குப் பிறகு பல நாடுகளுக்கு சென்று வந்தள்ளேன் இங்கு எதைச் சொல்கிறேனோ அதைத்தான் அங்கும் சொன்னேன். நாம் உண்மை முஸ்லிம்களாக வாழவேண்டும். திமையை தீமையால் அல்ல மாறாக நலவால் நாம் தவிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் இஸ்லாத்தின் உண்மைநிலையை உலகுக்கு உணர்த்த முடியும்.
சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு நபியவர்களுடைய மக்கத்து வாழ்க்கை எமக்கு ஆதாரமாக இருக்கின்றது. நாம் இஸ்லாம் கூறும் பிரகாரம் நல்ல முறையில் நடந்தும் பிற மதத்தினர் எங்களுக்கெதிராக சூழ்ச்சிகள் செய்தால் அல்லாஹ் அதற்குப் பொதுமானவன். 'இன்னும் அல்லாஹ் சதிசெய்பவர்களின் சதியைமுறியடித்துக் கூலி கொடுப்பவர்களில் மிகவும் சிறந்தவன்' (ஆலு இம்ரான் 54)
12) ஜம்இய்யத்துல் உலமாவும், அதன் தலைவராகிய நீங்களும் ஐ.தே,க தலைவரை சந்திக்க மறுத்ததாக கூறப்படுகிறதேஉண்மையா? ஏன்?
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரை சந்திப்பதற்கு நாம் நேரம்கொடுத்து மறுக்கவில்லை. இப்படியொரு சந்திப்பை வெள்ளிக் கிழமை 10:30 மணிக்கு ஏற்பாடு செய்யப்போவதாக ஒரு சகோதரர் எம்மைத் தொடர்புகொண்டார். இது முக்கிய சந்திப்பு நாட்டின் பல பாகங்களிலுமுள்ள உலமாக்கள் இதில் பங்கேற்க வேண்டும். ஆனால் வெள்ளிக்கிழமையில் அதுவும் 10:30 மணிக்கு அவர்களை அழைப்பது சாத்தியமில்லை. வேறொரு தினத்தில் ஏற்பாடு செய்யுங்கள் என்று நான் கூறிவிட்டேன். ஜம்இய்யவின் கௌரவ யெலாளர் அவர்களும் இந்த பதிலையே கூறியிருக்கிறார்கள். எம்மைத் தொடர்புகொண்ட சகோதரர் வேறு உலமாக்களை அழைத்துச் செல்லலாம் என்ற நல்லெண்ணத்தில் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். அல்லாஹ் அவருடைய நல்லெண்ணத்துக்கு நற்கூலி அளிப்பானாக. ஆனால் அவர் எதிர்பார்த்தது போன்று நடைபெறவில்லை. அதனால் ஜம்இய்யா வாக்களித்துவிட்டு மறுத்துவிட்டதாக ஜக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்தவர்கள் நினைத்துக்கொண்டார்கள். இதனையே ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரை ஜம்இய்யா சந்திக்க மறுத்ததாக சிலர் கதையைப் பரப்பி விட்டனர்.
இதன் பிறகு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஐக்கிய தேசியக் கட்சியைச் சந்திப்பதற்காக நேரம் கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தது. அதற்கு இது வரை எவ்வித பதிலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
13) வெளிநாடுகளில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் ஜம்இய்யத்துல் உலமாவுக்கு எத்தகைய பங்களிப்புகளை நல்கவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?
வெளிநாடுகளில் வசிக்கக் கூடியவர்களுக்கு வித்தியாசமான வளங்கள் இருக்கின்றன. அவற்றை இனங்கண்டு சமூக முன்னேற்றத்துக்காக பாவிக்க வேண்டும். உதாரணமாக வெளிநாடுகளில் முஸ்லிம்கள் வசிக்கும் அதே பிரதேசங்களில் பௌத்த சகோதரர்களும் வசிப்பார்கள் அவர்களுக்கு இலங்கையிலுள்ள பௌத்தர்களோடு மிக நெருங்கிய தொடர்பும் இருக்கும். அவர்களோடு நல்லுறவை வளர்த்து அவர்களினூடாக இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாக அரபு நாடுகளில் வசிக்கும் பௌத்தர்கள் இஸ்லாத்தின் மனிதநேயத்தைக் கண்ணூடாகக் கண்டு கொண்டிருப்பதுடன் இஸ்லாம் மனித நேயத்துக்கு வழங்கியிருக்கும் நலவுகளை அனுபவித்துக் கொண்டும்தான் இருப்பார்கள் எனவே அவர்கள் தனது மதத்தைச் சேர்ந்த பிறருக்கு தெளிவவுபடுத்துவது இலகுவாக இருக்கும்.
இதுபோன்று செய்ய வேண்டிய பல்வேறு பணிகள் இருக்கின்றன. தனது ஏழ்மையின் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய எத்தனையோ ஏழைக் குமருகள் பரிதாபத்துடன் வாழ்வைக் களிக்கின்றனர். றிசானா நபீக்குடைய பிரச்சினை வந்தபோது முழு நாடும் பல்வேறு கோணங்களில் பேச ஆரம்பித்தது. ஆனால் இப்பொழுது அது மறந்த கதையாக ஆகிவிட்டது. வெளிநாடு செல்லும் ஏழைப் பெண்களின் நிலமை கவனத்திற்கொள்ளப்பட்டு சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். எமது எதிர்கால சந்ததியினரின் கல்வி விடயங்களைக் கவனிக்கவேண்டும். இப்படியாக அதிகமான பணிகளைகச் சொல்லிக் கொண்டே போகலாம்.
வெளிநாடுகளில் வாழும் நம் நாட்டவர்கள் பிரச்சினைகள் வரும்போது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது மட்டும் போதுமானது என நினைக்கின்றனர். உண்மையில் இது தவறாகும். தங்களிடமிருக்கும் அனைத்து வளங்களும் நாட்டினதும் சமூகத்தினதும் உயர்வுக்காக பயன்படுத்தப்படல் வேண்டும்.
இங்கிலாந்திலிருந்து அங்குள்ள சகோதரர்கள் என்னைத் தொடர்பு கொண்டார்கள். நாங்கள் இங்கு அனைத்து அமைப்புக்களையும் சேர்ந்தவர்கள் ஒன்று கூடியிருக்கிறோம் வெளிநாடுகளில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் எத்தகைய பங்களிப்புக்களைச்செய்ய வேண்டுமெனக் கேட்டார்கள். அவர்களுடன் இத்தலைப்பில் சுமார் அரைமணி நேரம் மிக விரிவாகப் பேசினேன்.