(பழுளுல்லாஹ் பர்ஹான்)
மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து பயணிக்கும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை என கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்ததாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில வாரங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக காத்தான்குடிப் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து பயணிக்கும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிக்க வேண்டும் என பொலிஸார் கட்டாயமாக்கியதுடன் இதற்கு மாற்றமாக பயணிக்கும் பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தும் வந்தனர்.
இதனை கண்டிக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வி.இந்திரனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காத்தான்குடி நகர சபைத் தவிசாளரின் தலைமையில் பொதுமக்களின் ஆதரவுடன் நாளை வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையின் பின்னர் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.
மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து பயணிக்கும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிக்க வேண்டும் என்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் காத்தான்குடிப் பிரதேசத்தில் பிரதான வீதி தவிர்ந்த உள்ளக வீதிகளிலும் மோட்டார் போக்குவரத்துப் பொலிஸாரின் திடீர் நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வண்ணமே குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது இவ்வாறிருக்க குறித்த விடயம் தொடர்பில் இன்று என்னோடு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து பயணிக்கும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிக்க வேண்டும் என்பது இன்றிலிருந்து கட்டாயம் இல்லை எனவும் பிரதான வீதி தவிர்ந்த உள்ளக வீதிகளில் வீதிப் போக்குவரத்துப் பொலிஸாரின் நடவடிக்கைகள் இருக்க மாட்டாது என உறுதிமொழி வழங்கினார்.
இதனையடுத்து நடைபெற இருந்த குறித்த ஆர்ப்ட்டம் இரத்துச் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தலைமையில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலயத்தில் நடைபெறவுள்ளது. இதில் சம்மேளன பிரதிநிதிகள்,ஜம்மியதுல் உலமா பிரதிநிதிகள் உட்பட நகர சபை முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment