Home » » ரமழானின் எஞ்சிய பகுதியில் அதிகமாகப் பிரார்த்தனை புரிவோம் – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

ரமழானின் எஞ்சிய பகுதியில் அதிகமாகப் பிரார்த்தனை புரிவோம் – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

Written By Unknown on Tuesday, July 30, 2013 | 11:59 PM


உலகளாவிய முஸ்லிம்களுக்காகவும் நமது நல்வாழ்வுக்காகவும் நாட்டில் ஒற்றுமை சகவாழ்வு என்பன நிலவவும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் நீங்கவும் நம் சமூகத்தைப் பிழையாகப் புரிந்து கொண்டிருப்போருக்கு நல்லெண்ணத்தைக் கொடுக்கவும் நாம் பிரார்த்திக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ரமழானின் நடுப்பத்தை அடைந்துள்ள நாம் மிகவும் ஆர்வத்தோடும் நிதானமாகவும் உலமாக்களின் வழிகாட்டலோடும் அமல்களை நிறைவேற்றி வருகிறோம். ரமழானின் முதற் பகுதி அல்லாஹ்வின் பாவமன்னிப்பையும் நடுப்பகுதி அவனது அருளையும் கடைசிப் பகுதி நரக விடுதலையையும் தரும் என்றும் நம்பியே நல்லமல்களில் ஈடுபடுகிறோம்.

இந்த நடுப்பகுதியில் பத்ர் நிகழ்ச்சியும் நடந்ததை நினைவுபடுத்தும் நாம் அல்லாஹ்வின் உதவி அவனது அடியாருக்கு எப்படி கிடைத்தது என்பதையும் தெளிவாக தெரிந்திருக்கிறோம்.

எனவே, துஆக்கள் அங்கீகரிக்கப்படும் இவ்வரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் அதிகமாக துஆவில் ஈடுபட வேண்டும். துஆக்கள் அங்கீகரிக்கப்படும் வேளைகளில் உலகளாவிய முஸ்லிம்களுக்காகவும் நமது நல்வாழ்வுக்காகவும் நாட்டில் ஒற்றுமை சகவாழ்வு என்பன நிலவவும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் நீங்கவும் நம் சமூகத்தைப் பிழையாகப் புரிந்து கொண்டிருப்போருக்கு நல்லெண்ணத்தைக் கொடுக்கவும் நாம் பிரார்த்திக்க வேண்டும்.

முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் உதவியை நம்பியிருப்பவர்கள், அவனது உதவியின்றி வேறொன்றும் பயனளிக்கப் போவதில்லை. அவன் அநியாயத்தைப் பார்த்துக் கொண்டு சும்மா விட்டுவைக்கப் போவதுமில்லை. இப்புனித மாதத்தில் அல்லாஹ்விடம் கையேந்துவதே எமக்கு வழியாகும். எமக்கென்று இஸ்லாம் வகுத்த ஒரு வரம்பு உண்டு. அந்த வரம்பைப் பேணியே நாம் செயற்பட முடியும்.

ரமழான் பொறுமையின் மாதம், நோன்பு நோற்று பொறுமையாக இருப்போருக்கு அல்லாஹ்வின் துணை எப்போதும் உண்டு. ஆத்திரம் கொள்பவனால் யாதொன்றையும் சாதிக்க முடியாது என்பதனையும் நாம் விளங்க வேண்டும். எம்மால் நிகழும் தவறுகளுக்காக நாம் பிழைபொறுக்கத் தேடவேண்டும். எமது தவறுகள் காரணமாக சோதனைகள் ஏற்படும் என்பதை விளங்கி அதிகமதிகம் இஸ்திக்பாரிலும் ஈடுபட வேண்டும்.

நம்மீது விதியான ஸகாத்தை நாம் அதனைப் பெற தகுதியுடையோருக்கு கொடுத்து வரவேண்டும். ஸகாத் கொடுக்காத சமூகம் சோதனைக்குள்ளாகும் என்பது றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் எச்சரிக்கையாகும்.

எனவே ரமழானின் எஞ்சிய பகுதியை சரியாகப் பயன்படுத்திக் கொள்வோமாக. எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பிரார்த்தனைகளை அங்கீகரித்து நாட்டில் ஐக்கியம், சகவாழ்வு வளரவும் புரிந்துணர்வோடு வாழவும் நல்லருள் பாலிப்பானாக.
Share this article :