பிட்டும் தேங்காய்ப்பூவும் கதை சொல்லிச் சொல்லியே பிட்டைப்பிரித்தெடுக்க பயன்படும் குறியீடான தேங்காய்ப்பூ படிமத்தை தமிழ் முஸ்லிம் சமூக இனங்களுக்கு பிரயோகப்படுத்தும் கபடத்தனத்தை மரியாதைக்குறிய யோகேஸ்வரன் ஐயா அவர்களின் ‘படுவான்கரைக்குள் காத்தான்குடி வரும் அபாயம்’ என்ற சொற்பொழிவினை ஊடகங்கள் வாயிலாக வாசிக்கக் கிடைத்தது.
கடந்த யுத்த காலப்பகுதியில் தமிழ் முஸ்லிம் சகோதர இனங்களை பிரித்துவைத்து உயிர்ப்பழி நடாத்திய பயங்கரவாத இயக்கங்கள் இன்னும் ஐய்யா அவர்களது உறுவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினூடாக வந்திருக்கின்றதோ என எண்ணத் தோன்றுகிறது.
கடந்தகால கசப்புணர்வுகளை மறந்து இரு சமூகமும் ஒன்றித்து வாழ வேண்டும் என்ற கருத்துக்கள் சமூகத்தள மட்டத்தில் வழுப்பெற்று சகவாழ்வை நோக்கி நடை போடுகின்ற வேளையில் இத்தகைய சுயநல அரசியல் பின்னணி கொண்டவர்களது மனித பலி பூசைக்கு இரு அப்பாவி இனங்களையும் பலிக்கடாவாக மாற்ற நினைப்பது வேதனையளிக்கின்றது.
மதிப்புக்குறிய பாராளுமன்ற உருப்பினர் அவர்கள் வாழைச்சேனையில் பிறந்ததால் வரலாறு தெரியாமல் பேசினாரா அல்லது தெரியாதது போன்று நடிக்கிறாரா என்ற கேள்விகளுக்கு அப்பாவி ஜனங்களுக்கு விடை தெரியாமலும் இல்லை.
மண்முனை என்பது ஒரு தனியான பிரதேசம். 1990களில் பயங்கரவாதிகளின் முஸ்லிம்கள் மீதான தாக்குதலினால் இங்கு வசித்த 46 முஸ்லிம் குடும்பங்கள் இடம்பெயர வேண்டி ஏற்பட்டது.
இப்பிரதேச முதல் குடியாக கருதப்படும் மண்முனை மரைக்கார் என்பவரே 1926ல் அப்போதைய கிராம சபைக்கு மண்முனை துறை அமைப்பதற்காக தமது காணியினை அன்பளிப்பாக வழங்கி இருந்தார். அத்தோடு மண்முனை பெரும்பான்மை முஸ்லிம் கிராம சேவகர் பிரிவாக காணப்பட்டது.
(இன்று முஸ்லிம்களது பெரும்பான்மை கிராம சேவகர் பிரிவினை இரு கூறாக்கி மண்முனை, மாவிலங்கத்துறை என இருவேறு கிராம சேவகர் பிரிவு திட்டமிட்டு தற்போது உருவாக்கப்பட்டு முஸ்லிம்கள் இப்பிரிவுகளில் சிறுபான்மையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளனர்).
படுவாங்கரைப் பகுதியில் காணப்பட்ட காத்தான்குடி முஸ்லிம்களுக்குச் சொந்தமான 2600க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பயணங்கள் இப்பிரதேசத்தினூடாகவே மேற்கொள்ளப்பட்டதுடன், அம்பாரை 40ம் கொலனி வரை காணப்பட்ட முஸ்லிம்களது விவசாயக் காணிகளுக்கும் காத்தான்குடி முஸ்லிம்கள் இப்பிரதேசத்தினூடாகவே பயணித்தனர்.
இத்தகைய வரலாற்று தொன்மைவாய்ந்த இப்பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் சகோதர வாஞ்சையுடன் வாழ்ந்து வந்த வரலாற்றை பயங்கரவாத இயக்கங்கள் திருடிக்கொண்டது போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கௌரவப் பிச்சைக்காரன் எனக் கூறிக் கொண்டு வரலாற்றுக் கொள்ளையில் ஈடுபட முனைவது தற்கால சிறுபான்மையினருக்கான அரசியல் போராட்ட களத்தில் சிறந்ததாக அமையாது.
உன்னிச்சையில் பாரம்பரியமாக வாழ்ந்த முஸ்லிம்களை குடியேற்ற மாட்டோம் என்று அடம்பிடித்து இன்று குரங்கு அப்பம்திரித்த கதையாக மாறிவருவதை உதாரணமாகக் கொண்டு தூரநோக்கோடு சிந்திக்க தலைப்பட்டதன் விளைவாகவே கௌரவ அமைச்சர் கருணா அம்மான் மண்முனைப்பால நிர்மாணத்திற்கான அடிக்கல்லினை நட்டதாக நான் கருதுகின்றேன்.
இரு இனங்களையும் இனியும் பிரிப்பது எதிர்கால நெருக்குவாரங்களுக்கு காரணமாக அமையுமென கருணா அம்மான் தனது நீண்டகால போராட்ட வரலாற்றில் உணர்ந்து கொண்டதை நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட கௌரவ யோகேஸ்வரன் போன்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இனவாதிகள் சிலர் எப்போது புரிந்து கொள்வார்கள் என கேட்க தோன்றுகின்றது.
மண்முனை பற்று முஸ்லிம்களது காணி தொடர்பான பிரச்சிணைகளை பேசுவதற்காக சென்ற போது அப்போது மட்டு அம்பாறை புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் கௌசல்யன் கூட மண்முனை, படுவான்கரை முஸ்லிம்களது நில உரிமையை ஏற்றுக்கொண்டமை இங்கு ஞாபகப்படுத்த வேண்டிய விடயம்.
ஓட்டமாவடியில் தமிழர்கள் இனச்சுத்திகரிப்புக்குள்ளாக்கப்பட்டார்கள் என்றோ, வாழைச்சேனை ஹிஜ்ராபுர (ஜிந்தாபாத்) முஸ்லிம்கள் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு துரத்தப்பட்டார்கள் என்றோ, கிரானில் (கிரான்குடி சேரடி முனை) பகுதியில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் 1899 பங்குனி 7ம் திகதி 19பேருடன் முஹம்மதியா முஸ்லிம் பாடசாலை இயங்கியது என்று கூறிக்கொண்டு அறிக்கைவிடுவதும் பின்னர் படையெடுப்பதினாலேயோ, கல்லியங்காடு முஸ்லிம் கொலனியில் இருந்த 152க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் துரத்தியடிக்கப்பட்டு பள்ளிவாசலை இடித்து இந்து மடாலயம் அமைத்துவிட்டதனால் அதற்கெதிராக மடாலயத்தை உடைத்தெறிய முனைவதனாலேயோ இரு இனங்களையும் சகவாழ்வை நோக்கி நகர்த்த முடியாது. வரலாற்றில் பல மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றது.
முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேன்டும். அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களில் விட்டுக்கொடுப்புக்களுடன், பகிர்ந்துண்டு வாழ வழிவகை செய்வதே இன்றைய தார்மீக கடமையாகும்.
இன்னும் வரலாற்றை இருட்டடிப்புச்செய்து தமது அரசியல் வங்குரோத்துக்களை மறைத்து இனத்துவேச நச்சு விதைகளை விதைப்பதன் மூலம் எதனைத்தான் சாதித்திட முடியும் என்பதனை எத்தனையோ முல்லி வாய்க்கால்கள் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புரையோடிப்போன காணிப்பிரச்சிணைகளுக்கு மனதார விட்டுக்கொடுப்புக்களுடன் மீள்குடியேற்றங்களையும் நில உரிமைகளையும் உறுதி செய்வது இரு இனங்களதும் தலையாய கடமையாகும். இதில் தமிழ் சகோதர இனம் பாதிப்படைந்திருந்தால் கூட அதற்கான நியாயமான தீர்வுகள் முன்வைக்கப்படவேண்டும்.
இன நல்லுறவை வளர்ப்பதற்கான ஒரு பொறி முறையினை ஏற்படுத்தி செயற்பட வேண்டிய தேவை தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு தார்மீகப் பொறுப்பாகவுள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பழுலுல்லாஹ் பர்ஹான்:
Post a Comment